சென்னை ஐ.ஐ.டி.யில் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு? சுப்பிரமணிய சுவாமி கேள்வி! 

சென்னை ஐ.ஐ.டி.யில் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு? சுப்பிரமணிய சுவாமி கேள்வி! 

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடியில் தேசிய துறைமுக நீர்வழிப் பாதை கடற்கரைத் துறையினை உருவாக்குவது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில்நுட்பத் துறைக்கும்,மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஐஐடி மாணவர்கள் இருவர் மற்றும் மாணவியர் இருவர்  ஒன்றாகச் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் அமைந்த கணபதி வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பாடினார்கள். இதே மாணவர்கள் நிகச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடினார்கள்.

மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டவிவகாரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு தமிழை அவமானப்படுத்துவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, 'எந்த பாடலைப் பாட வேண்டும் என்பது மாணவர்களின் தேர்வுதான். மாணவர்களை நிர்வாகம் எப்பொழுதும் இந்தப் பாடலை பாட வேண்டும்; இந்தப் பாடலை பாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தியது இல்லை. இதில் சர்ச்சைகளை உணடாக்க வேண்டாம்' என்று தெரிவித்தார்.     

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஐஐடி விவகாரம் குறித்து கேட்கப்பட்ட பொழுது அவர் கூறியதாவது:

சென்னை ஐ.ஐ.டி.யில் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? ஐ.ஐ.டி. என்பது அகில இந்திய கல்வி நிறுவனம். அது ஒன்றும் தமிழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரி கிடையாது. நாடாளுமன்றத்தில் போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.யில் மகாகணபதி பாடலை பாடினால் ஒன்றும் தவறு கிடையாது. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் யாரும் கலந்து கொள்ளவில்லையே?

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com