மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ பாதித்த பகுதிகளை சீரமைக்கும் பணி இன்று தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை (பிப்.26) தொடங்கப்படவுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை (பிப்.26) தொடங்கப்படவுள்ளது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்கு ராஜகோபுரம் உள்பகுதியில் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு தீப்பற்றியது. இதில் 20 கடைகள், 19 தூண்கள் சேதமடைந்தன. மேலும் மண்டப மேற்கூரைப் பகுதியும் இடிந்து விழுந்தது. மண்டபத்தின் 7 ஆயிரம் சதுர அடி பரப்பு தீயால் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 தீ விபத்தைத் தொடர்ந்து வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் கோயிலின் உள்ளே உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அம்மன் சன்னதி பகுதியில் உள்ள கடைகள் இன்னும் அகற்றப்படவில்லை.
 தீ விபத்தில் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்க பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் அமைத்துள்ளது.
 சிறப்புக் குழுவினர் கடந்த 8-ஆம் தேதி மற்றும் 18-ஆம் தேதி கூடி பேசினர். பின்னர் தீ பாதித்த பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன்படி தீ பாதித்த பகுதியின் தூண்கள், மேற்கூரைகளை ஆவணப்படுத்தும் பணி கடந்த 3 நாள்களாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பில் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
 வெள்ளிக்கிழமை (பிப்.23) தொடங்கிய ஆவணப்படுத்தும் பணியில் விடியோ, புகைப்படங்கள் மூலம் பழைய தூண்களின் சிற்பங்கள், சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டன.
 ஆவணப்படுத்தும் பணி முதல் கட்டமாக முடிந்த நிலையில், வீரவசந்தராயர் மண்டபத்தின் பசுபதிநாதர் சன்னதி பகுதியிலிருந்து சீரமைப்புப் பணிகளை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக முதலில் தீ பாதித்த மேற்கூரை கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரேன்களை பயன்படுத்தி வடக்காடி வீதியிலிருந்து கிழக்காடி வீதிக்கு வரும் வழியில் உள்ள 16 கால் மண்டப பகுதியில் உள்ள மேற்கூரை கற்களை அகற்றும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ளன. சீரமைக்கும் பணிகள் பல கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாகவும், தீ பாதித்தவற்றை அகற்றிய பிறகே சீரமைப்புக்கான செலவு குறித்து உறுதியாகக் கூறமுடியும் எனவும் ஆலோசனைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com