ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கை: திரட்டப்பட்ட நிதி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு; இருக்கை அமைப்புக் குழுத் தலைவர் தகவல்

ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கை: திரட்டப்பட்ட நிதி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு; இருக்கை அமைப்புக் குழுத் தலைவர் தகவல்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டப்பட்டது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டப்பட்டது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அப்பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்புக்குழுத் தலைவர் மருத்துவர் வி. ஜானகிராமன் தெரிவித்தார்.
 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையிலான பேராசிரியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய ஜானகிராமன், ஹார்வர்டு தமிழ் இருக்கை உருவாக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
 மேலும், எதிர்காலத்தில் தமிழ் இருக்கையோடு, தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதில் துணைவேந்தர் க. பாஸ்கரன், பதிவாளர் எஸ். முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
 இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வி. ஜானகிராமன் கூறியது: 382 ஆண்டுகள் பழைமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 38 பேர் பிரதமர்களாக, குடியரசுத் தலைவர்களாகப் பணியாற்றியுள்ளனர். 43 பேர் நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். 43 பேர் சிறந்த எழுத்தாளர்களாகி உள்ளனர். இத்தகைய பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அணுகினோம். அப்போது அவர்கள் இருக்கை அமைக்க ரூ. 40 கோடி நிதி வேண்டும் என்று தெரிவித்தனர்.
 இப்பல்கலைக்கழகம் எதை முன்னெடுத்துச்சென்றாலும் அது உலகம் முழுவதும் பிரசித்தி பெறும். அதேபோல, தொன்மையான தமிழ்மொழியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் முன்னெடுத்துக் கூறினால் தமிழ்மொழி மேலும் வளர்ச்சி அடையும்.
 ஏற்கெனவே தமிழ்மொழிக்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லின் பல்கலைக்கழகத்தில் இருக்கை உள்ளது. இது தவிர மெக்சிகோ, சிகாகோ, கொலம்பியா உள்பட 6 இடங்களிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
 தமிழ் இருக்கை அமைப்பதற்கான ரூ.40 கோடி நிதி திரட்டப்பட்டது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வரும். இதையடுத்து தமிழக முதல்வரை அடுத்த வாரத்தில் சந்திக்க உள்ளோம். தமிழ் இருக்கை அமைக்கப்பட்ட பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து இன்னும் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com