ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு: தலைமைச் செயல் அதிகாரி தகவல் 

ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு:  ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு: தலைமைச் செயல் அதிகாரி தகவல் 

சென்னை:  ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. செல்லிடப்பேசி புழக்கத்துக்கு வந்த காலத்திலேயே ஏர்செல் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியதால், அதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவு குவியத் தொடங்கினர்.

நாளடைவில் செல்லிடப்பேசி இணைப்பு வழங்கும் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிக் குவித்தன. அதேசமயம், 'ஏர்செல்' நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் படிப்படியாக விலகி வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை நாடத் தொடங்கினர். இதற்கு செல்லிடப்பேசி சிக்னல்கள் கிடைக்காததும் ஒரு காரணம் என வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சிக்னல் இல்லாத காரணத்தால், ஏர்செல் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் கடந்த வாரம் புதன்கிழமை கடும் அவதிக்கு உள்ளாகினர். அவர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவன சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சூழ்நிலை உருவானது.

ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளது. இதனால் சிக்னல் விநியோகம் தடைபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி: ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை பாதிப்பு காரணமாக விரக்தியுற்ற வாடிக்கையாளர்கள், தமிழகத்தில் சில இடங்களில் ஏர்செல் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர்செல் செல்லிடப் பேசி சேவையின் சிக்னல் கிடைப்பதில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகள் வாடகைப் பணம் நிலுவை தொடர்பான பிரச்னையில், தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த  டவர்களில் சிக்னல் விநியோகத்தினை நிறுத்தியதால் சேவை தடைபட்டது.

தற்பொழுது மீண்டும் அதேமாதிரியான சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளிலும் ஏர்செல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் ஏர்செல் எண்னை வங்கிப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் இன்று மாலை அல்லது மதியத்துக்குள் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com