உலக அளவில் முதல் 10 இடங்களில் தமிழைக் கொண்டு வர11 திட்டங்கள்

உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள்ளாக தமிழ் மொழியைக் கொண்டு வருவதற்காக 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை
உலக அளவில் முதல் 10 இடங்களில் தமிழைக் கொண்டு வர11 திட்டங்கள்

உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள்ளாக தமிழ் மொழியைக் கொண்டு வருவதற்காக 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
யுனெஸ்கோ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் உலகத்தில் உள்ள 6,100 மொழிகளில் தமிழ் 16-வது இடத்தில் இருப்பது தெரிய வந்தது. முதல் 10 மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியைக் கொண்டு வருவதற்காகத் தமிழக அரசு 11 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
இதில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை மீட்டெடுப்பது, இசை, கவின்கலை பல்கலைக்கழகத்துக்குப் புத்துயிரூட்டுவது, உலகத் தமிழ்ச் சங்கத்தில் கலாசார மையத்தை அமைப்பது, சென்னையை இசை நகரமாக அங்கீகரிப்பது, உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
மக்கள் ஆளுநர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு என்னென்ன தேவையோ அவற்றுக்கு உதவிகரமாக இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். பொதுவாக இந்த இடத்தை நல்ல சரணாலயமாக உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில் மத்திய அரசு உதவி, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு உதவி என நிதி திரட்டுவதற்கு மிகப் பெரிய அளவில் உதவி புரிவதாக ஆளுநர் உறுதி கூறியுள்ளார். 
இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதில் ஐரோப்பாவிலிருந்து மட்டும் 20,000 மாணவர்கள் இணைந்துள்ளனர். தமிழிசை, கர்நாடக இசை, பரத நாட்டியத்தை உலக அளவில் கொண்டு செல்வதற்காக இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 10,000-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுத் தருவதாக ஆளுநர் கூறியுள்ளார். அதனால்தான் விழாவில் ஆளுநரை 'மக்கள் ஆளுநர்' என்று குறிப்பிட்டேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com