எங்கும் ஊழல், தடை: முடங்கிக் கிடக்கும் பொலிவுறு நகரம் திட்டம்! ராமதாஸ் கண்டனம்

பொலிவுறு நகரங்கள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் முடங்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எங்கும் ஊழல், தடை: முடங்கிக் கிடக்கும் பொலிவுறு நகரம் திட்டம்! ராமதாஸ் கண்டனம்

பொலிவுறு நகரங்கள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் முடங்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பின்தங்கியுள்ளது என்பதற்கு பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முடக்கி வைத்துள்ளனர் என்பது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்தத் திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் எந்த வகையிலும் பயன்படுத்தப்படாமல் கிடப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொலிவுறு நகரங்கள் திட்டப்படி இந்தியா முழுவதும் 90 பொலிவுறு நகரங்களை அமைக்கும் பணி ரூ. 1,91,155 கோடியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் 11 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்படவுள்ளன. இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகத்திலுள்ள 11 பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்கான இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 0.5% கூட செலவிடப்படவில்லை. எடுத்துக்காட்டாக சென்னையில் பொலிவுறு நகரம் திட்டம் ரூ.1366 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக மத்திய அரசின் சார்பில் ரூ.196 கோடி, மாநில அரசின் சார்பில் ரூ.200 கோடி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடி என மொத்தம்  ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியிலிருந்து இதுவரை ரூ.3.82 கோடி மட்டுமே, அதாவது 0.77% மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஆறு மாநகராட்சிகளில் பொலிவுறு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிதியில் இதுவரை ரூ.12.21 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான முதல் கட்ட ஒதுக்கீட்டில் 0.61% மட்டுமேயாகும். பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பெரும் தடையாக இருப்பது நிதி ஒதுக்கீடு தான். ஆனால், பொலிவுறு திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

பொலிவுறு நகரங்களை அமைப்பதற்காக ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்தனியாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். அவை தன்னிச்சையாக இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இதன் மூலம் பணிகளை விரைவாக முடிக்க இயலும். ஆனால், தமிழ்நாட்டில் சிறப்பு நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. பொலிவுறு நகரங்கள் திட்டப்படி ரூ.6.50 கோடிக்கும் குறைவான திட்டங்களை மட்டுமே சிறப்பு நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். அதற்கும் கூடுதலான மதிப்புள்ள திட்டங்களை மாநில அளவிலான உயர்நிலைக்குழுவின் அனுமதி பெற்று தான் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு  இருப்பது தான் பொலிவுறு நகரங்கள் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும். உதாரணமாக கோவை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்திட்டம் அமைப்பதற்கு அனுமதி வாங்குவதற்கு சுமார் ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது. இதேநிலை நீடித்தால் பொலிவுறு திட்டங்கள் சாத்தியமாகாது.

புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்படுவதன்  நோக்கமே, வழக்கமான அரசு நிர்வாக நடைமுறை சிக்கல்களால் திட்டப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது  என்பதற்காகத் தான். உதாரணமாக சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்காக சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களிடமிருந்து நிதி பெற்று  சேதுசமுத்திரக் கால்வாய் சிறப்பு நிறுவனம் அமைக்கப் பட்டது. அந்த நிறுவனம் மத்திய அரசின் தலையீடோ, பிற துறைமுகங்களின் தலையீடோ இல்லாமல் தான் செயல்பட்டது. பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்களும் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் பொலிவுறு நகரங்கள் அமைப்பதற்கான ஒவ்வொரு பணிக்கும் மாநில அளவிலான குழுவின்  ஒப்புதலை பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது முறையல்ல. ஒவ்வொரு திட்டப் பணிக்கும் தனித்தனியாக கையூட்டு வாங்க வேண்டும் என்பது தான் இந்த நிபந்தனையின் நோக்கம் ஆகும். ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை முடக்கக்கூடாது.

ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்றால் திட்டப்பணிகள் நிச்சயமாக தாமதம் ஆகும். இது திட்டச் செலவுகளை பல மடங்கு அதிகமாக்கி விடும். எனவே, பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்கான சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து பொலிவுறு நகரங்கள் அமைக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com