ஓலா, உபர் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணம் இதுதான்!

சென்னையில் இன்று ஓலா, உபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஓலா, உபர் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணம் இதுதான்!


சென்னை: சென்னையில் இன்று ஓலா, உபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

செல்போன் செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஓலா, உபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்களை அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கழகம் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னையில், இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றிய 3 கால் டாக்ஸி ஓட்டுநர்கள், அதிகக் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், இன்று சென்னையில் சுமார் 40 ஆயிரம் கால் டாக்ஸிகளும், சுற்றுலாப்பயணிகளுக்கான டாக்ஸிகளும் இயங்காது என்றும் தமிழ்நாடு கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கழகம் அறிவித்துள்ளது.

ஒலா மற்றும் உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் அன்றாட வருவாயில் சுமார் 27 சதவீதத் தொகையை பிடித்துக் கொள்கிறார்கள். அதாவது, ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம் நாங்கள் கார் ஓட்டி ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் அதில் 27 சதவீதம் அதாவது ரூ.540ஐ ஒலா அல்ல்து உபர் நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்கின்றன. எரிவாயு செலவு போக ஓட்டுநர்களுக்கு தினமும் ரூ.460 தான் கிடைக்கிறது. இதனால், ஓட்டுநர்கள் குடும்பத்தை நடத்துவது சிரமமாகிறது என்று கழகத்தின் தலைவர் பி. அன்பழகன் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில், ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஓட்டுநர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றன. இந்த விஷயத்தில் மாநில அரசும் இதுவரை மௌனமாகவே இருந்து வருகிறது. 

பல முறை, கார் ஓட்டுநர்கள் சுமார் 5 முதல் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பயணிகளை ஏற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே போல், சுற்றுலாப் பயணமாக இருந்தால், காஞ்சிபுரம் செல்லும் பயணியை திருவள்ளூர் சென்று ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றால், ஓட்டுநர்கள் சுமார் 30 கி.மீ. தொலைவை சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

சென்னையில் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களுக்காக சுமார் 32,000 கார்கள் இயக்கப்படுகின்றன. இதே போல, என்டிஎல், ஃபாஸ்ட் டிராக், பிரென்ட்ஸ் போன்ற இதர நிறுவனங்களின் கார்களும் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 40 ஆயிரம் கார்களில், 20 ஆயிரம் கார்கள் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என ஷிஃப்ட் முறையில் இயக்கப்படுகின்றன. எனவே கிட்டத்தட்ட 60 ஆயிரம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பித்தான் வாழ்கின்றன.

சிலர் மோசமான சாலைகளிலும், 5 அடிக்கும் குறைவான அகலம் கொண்ட சாலைகளிலும் பயணிக்குமாறு பயணிகள் கூறுவதுண்டு. அதனை நாங்கள் மறுத்தால் எங்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

எனவே, ஓட்டுநர்களிடம் இருந்து இதுபோன்ற செயலியை அடிப்படையாகக் கொண்ட கால் டாக்ஸி நிறுவனங்கள் பெறும் தொகையை 27 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கார் ஓட்டுநர்களும், கார் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com