ஜெயலலிதா சிகிச்சை விடியோ: விசாரணை ஆணையத்தில் தினகரன் ஒப்படைப்பு

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோக்களை விசாரணை ஆணையத்தில் வழக்குரைஞர் மூலமாக ஆர்.கே.நகர் தொகுதி
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரான, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா.
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரான, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோக்களை விசாரணை ஆணையத்தில் வழக்குரைஞர் மூலமாக ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்களை ஏழு நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தினகரனுக்கு விசாரணை ஆணையம் கடந்த மாதம் 27-ஆம் அழைப்பாணை அனுப்பி இருந்தது. இதன்படி, தினகரன் சார்பில் அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி பென்-டிரைவை சமர்ப்பித்தார். அதில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எடுக்கப்பட்ட 20 நிமிடங்கள் ஓடக்கூடிய 4 விடியோக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை, அண்மையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டதைத் தவிர்த்த விடியோக்களாகும்.

இதுகுறித்து வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா உயிருடன் இருந்தது, அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விடியோக்கள் அடங்கிய பென்-டிரைவ் நீதிபதி ஆறுமுகசாமியிடம் வழங்கப்பட்டது. அதை அவர் கணினியில் பொருத்திப் பார்த்துவிட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்கி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

இந்த அழைப்பாணையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் இருப்பின் அதை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக சசிகலாவைச் சந்திக்க முடியவில்லை. அவரிடம் ஏதாவது ஆதாரங்கள் இருப்பின் அவையும் விசாரணை ஆணையத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றார்.

பூங்குன்றன் ஆதாரம் ஒப்படைப்பு: போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் கடந்த 2016-இல் வேலை செய்தவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அவரது உதவியாளர் பூங்குன்றனுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்து. இதையடுத்து, அவரது சார்பில் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கடந்த 2016-இல் ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த 15 பேரின் விவரங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜன.5-க்குள் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவு: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்களை 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவருமான பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி சம்மன் அனுப்பி இருந்தது. 

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கால அவகாசம் கோரியதை அடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் (ஜன. 5) ஆதாரங்களை ஒப்படைக்குமாறு செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொன்னேன்:கிருஷ்ணப்பிரியா
விசாரணை ஆணையத்தின் முன் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா செவ்வாய்க்கிழமை ஆஜரானார். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிருஷ்ணப்பிரியாவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,'ஜெயலலிதா சிகிச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த தகவல்ளைச் சொன்னேன். அவர் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் என்னிடம் எதுவும் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com