தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு

தலைவாசல் அருகே புத்தூரில் 2 நடுகற்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு

தலைவாசல் அருகே புத்தூரில் 2 நடுகற்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,  ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.  அப்போது, புத்தூர் அரசுப் பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. 

நடுகல்: ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல்,  போரில் வீரமரணம் அடைந்தவர்கள்,  மக்களுக்கு தீங்கு செய்த புலி,  பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள்,  தன் நாடு போரில் வெற்றிபெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள்,  மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.

புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம்.  இவை 40 செ.மீ. உயரம் 35 செ.மீ. அகலம் உடையதாக உள்ளது.  இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது.  இதை தலைவெட்டி சாமி என ஊர்மக்கள் அழைக்கிறார்கள்.  முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடதுபக்கக் கொண்டையுடனும்,  இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகுப் பக்கம் அம்புக்கூடு இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியைத் தாக்கும் நிலையில் உள்ளது.  

இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. கழுத்தில் சரபளியும் சவடியும் உள்ளது.  மார்பில் சன்னவீரம், வலது கையில் கத்தி,  இடது கையில் வில் ஏந்தியும்,  வயிற்றுக்கட்டும்  (உதிரபந்தம்) உள்ளது.  வயிற்றுக் கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது.  இடை முதல் தொடை வரை அரையாடையும், வலது கால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. 

சன்ன வீரம்:  இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும்.  சன்ன வீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளன.  சன்னவீரம் போர்க்கடவுளான முருகன் அணிவதாகும்.  இது வீரத்தின் சின்னம் வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும்.  கழுத்தைச் சுற்றியும் மார்பணிகளைச் சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம் எனப்படும்.  இப் பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால்,  இன்னும் பல வரலாற்றுத் தீர்வுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com