தியாகராஜரின் கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுப்பது அவசியம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தியாகராஜ சுவாமிகள் இயற்றி இதுவரை கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுக்க வேண்டும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

தியாகராஜ சுவாமிகள் இயற்றி இதுவரை கண்டறியப்படாத பாடல்களை மீட்டெடுக்க வேண்டும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்ஸவ சபா சார்பில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171-ஆம் ஆண்டு ஆராதனை தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
இந்தியாவின் தென்னகத்தில் கர்நாடக இசை உருவாக்கப்பட்டது. துருக்கி, பெர்ஷியா, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த படையெடுப்பாளர்கள் பிற இசை வடிவங்களைக் கொண்டு வந்தனர். என்றாலும், மதங்கள், பாரம்பரியம், கலாசாரத்தால் கர்நாடக இசை கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்கிறது.
கர்நாடக இசையின் ராகங்கள் ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது. கர்நாடக இசைப் பாடல்களில் ஏராளமான பிரிவுகள் உள்ளன.
கர்நாடக இசை இறைவன், இறைவி உடன் ஆழமான பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புரந்தரதாசர் கர்நாடக இசையின் தந்தையாகக் கருதப்படுகிறார். கர்நாடக இசை வடிவத்தை நெறிப்படுத்திய பெருமை அவரையே சாரும். மிகப் பெரிய இசை வல்லுநரான அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உருவாகக் காரணமானவர்.
18-ஆம் நூற்றாண்டில் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் கர்நாடக இசை மிக உயரிய இடத்தை அடைந்தது. பாபநாசம் சிவன், சுவாதி திருநாள், அன்னமாச்சாரியா, அருணகிரி நாதர் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களால் கர்நாடக இசை தொடர்ந்து புகழ் பெற்றிருந்தது.
திருவையாறில் இப்போது கூடி, அவர் இயற்றிய புகழ்பெற்ற பாடல்களைப் பாடுகிறோம். ராமபிரானின் மிகச் சிறந்த பக்தராக தியாகபிரம்மம் திகழ்ந்தார். 
சாமானிய மக்களும் ரசிக்கும் விதமாக தியாகராஜ சுவாமிகள் எளிமையான, ரம்மியமான பாடல்களைப் படைத்துள்ளார். அவர் 20,000-க்கும் அதிகமான பாடல்களை இயற்றியுள்ளார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு ஏறத்தாழ 800 பாடல்கள் மட்டும் மீட்டெடுக்கப்பட்டன. தியாகராஜ சுவாமிகளின் எண்ணற்ற இதர பாடல்களையும் மீட்டெடுக்க வேண்டும். அவருடைய ஆராதனை விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அவர் இயற்றிய இசைப் பாடல்களையும் மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார் பன்வாரிலால் புரோஹித்.
விழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார், சபாவின் அறங்காவலர்கள் குழுத் தலைவரும், தமாகா தலைவருமான ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சபா செயலர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றார். செயலர் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் நன்றி கூறினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழா தொடர்ந்து ஜன. 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆராதனை நாளான ஜன. 6-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com