தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் கடும் அவதி

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பணிப்

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. 
இதில், சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி டாக்டராகும் வகையில் விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர், செயலாளரை மத்திய அரசே நியமிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு இந்திய மருத்துவ சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துமனைகளில் போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு, நீரிழிவு, இதயம், கண் உள்ளிட்ட சிகிச்சைப் பிரிவுகள் இயங்கவில்லை. அவசர அறுவை சிகிச்சை, பிரசவம், உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை மட்டுமே இயங்கின.
அரசு மருத்துவர்கள் போராட்டம்-எம்எல்ஏக்கள் ஆதரவு: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் முத்துராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், உ.தனியரசு ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட சென்னை, தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒருமணி நேர பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயாளிகள் அவதி: அரசு, தனியார் மருத்துவர்களின் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் அவதியுற்றனர். 
நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வந்தவர்களும், காய்ச்சல், தலைவலி சிகிச்சைக்கு வந்திருந்தவர்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
மருத்துவத் துறையில் பெரு நிறுவனங்களைப் புகுத்தும் முயற்சி: சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால், மருத்துவமும், மருத்துவக் கல்வியும் பெரு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும். மருத்துவத் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற போர்வையில் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களையும், வெளிநாட்டு டாக்டர்களையும் நேரடியாக அனுமதிக்கும் வகையிலும் இந்தச் சட்டம் உள்ளது.
மேலும், 25 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இந்த புதிய ஆணையத்தில் 5 பேரைத் தவிர மற்ற 20 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்றும் ஆணையத்தின் தலைவர், செயலாளரையும் மத்திய அரசே நியமிக்கும் என்பதன் மூலம் மருத்துவத் துறையில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகள் பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவப் படிப்பின் மூலம் அலோபதி மருத்துவ கிசிக்சை அளிக்கலாம் போன்ற பல சட்டங்கள் இதில் உள்ளன. இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com