சாயக் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்: இழப்பீட்டுத் தொகையை திரும்பச் செலுத்த விவசாயிகளுக்கு நோட்டீஸ்!

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் பாசனத்துக்கு உள்பட்ட பகுதிகளில், சாயக் கழிவுநீர் பாதிப்பால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ. 25 கோடி இழப்பீட்டுத் தொகையை
சாயக் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்: இழப்பீட்டுத் தொகையை திரும்பச் செலுத்த விவசாயிகளுக்கு நோட்டீஸ்!

நீதிமன்ற உத்தரவால் வருவாய்த் துறை நடவடிக்கை
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் பாசனத்துக்கு உள்பட்ட பகுதிகளில், சாயக் கழிவுநீர் பாதிப்பால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ. 25 கோடி இழப்பீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்த வலியுறுத்தி, வருவாய்த் துறை சார்பில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூரின் தொழில் வளர்ச்சியால் கடந்த 2010-ஆம் ஆண்டு வரை, நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்ட சுத்திகரிப்பு செய்யாத சாயக்கழிவு நீரால், திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம், திருப்பூர் முதல் கொடுமுடி வரை இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் 1,46,389 ஏக்கர் நிலங்கள் பொட்டல் காடாக மாறியதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிப்படைந்தது. அத்துடன், விவசாயம் சார்ந்து வேலைவாய்ப்புப் பெற்று வந்த 68 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
சாயக்கழிவு நீரின் பாதிப்புகள் குறித்து, ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்ட 1992-ஆம் ஆண்டு முதலே விவசாயிகள் புகார் தெரிவித்தும், நாள்தோறும் பாய்ந்த கோடிக்கணக்கான லிட்டர் சாயக்கழிவு நீரைக் கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை, மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், நொய்யல் ஆறு, ஒரத்துப்பாளையம் அணை சார்ந்த விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
தவிர, அணையில் இருந்து சாயக்கழிவு கலந்த தண்ணீரை வெளியேற்றக் கூடாது என ஒரத்துப்பாளையம் அணைக்குக் கீழிருந்த விவசாயிகளும் வழக்குத் தொடுத்தனர். இதனால் அணையில் 1999-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சாயக்கழிவு நீர் தேங்கி நின்று, அணை சார்ந்த கத்தாங்கண்ணி, கொடுமணல், கணபதிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அணையைத் திறந்துவிடவேண்டும் என நீதிமன்றத்தை நாடியதால், கடந்த 2005-ஆம் ஆண்டு, காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பயன்படுத்தி, அணை நீர் நொய்யல் ஆற்றில் முழுமையாகத் திறந்து விடப்பட்டது.
அதன்பின், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கின் இறுதியில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், அணையைச் சுத்தப்படுத்தவும், அதனால் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும் திருப்பூரைச் சேர்ந்த சாய ஆலை தொழில் துறையினர் மொத்தமாக ரூ. 75 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும். அதில், ரூ. 12.5 கோடியை அணையைச் சுத்தப்படுத்த நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ஆய்வுப் பணிகளை அதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர் 2 ஆண்டுகள் மேற்கொண்டனர். அக்குழுவினர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளித்த அறிக்கையில், மொத்தம் 1,46,389 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அதில் 36.8 சதவீத நிலங்கள் (53,938 ஏக்கர்) மிக அபாயகரமான அளவில் மீண்டும் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கும், 24.7 சதவீத நிலங்கள் (36,139 ஏக்கர்) மிதமான அளவிலும், 38.5 சதவீத நிலங்கள் (56,312 ஏக்கர்) குறைந்த அளவிலும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
தவிர, 1980-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை, மொத்தம் 2,870 டன் அளவுக்கு திடக் கழிவுகளும், நாளொன்றுக்கு கோடிக்கணக்கான லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிப்படைந்து, 68 கிராமங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, வழக்குத் தொடுத்திருந்த சங்கங்களில் ஒன்றைச் சேர்ந்த திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 398 விவசாயிகளுக்கு முதல்கட்டமாக, கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ. 25 கோடி இழப்பீடாக தொழில் துறை மூலமாக வழங்கப்பட்டது.
ஆனால், மீதமிருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில் உத்தரவு இருக்க வேண்டும் எனவும், இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக வழங்காமல் சங்கத்தின் மூலமாகக் கொடுத்திருப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறி, பிற சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வழக்குத் தொடுத்தனர்.
திரும்ப வசூலிக்க உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2009 டிசம்பர் முதல் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்ப வசூலிக்குமாறு வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து இழப்பீடு பெற்ற விவசாய சங்கத்தினரும் தமிழக அரசும் மேல்முறையீடு செய்தனர். ஆயினும், மேல்முறையீடு வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வசூலிக்க கடந்த 2013-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர் நீதிமன்ற ஆணையை ரத்து செய்யக் கோரி இழப்பீடு பெற்ற விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், கடந்த 2014 மார்ச் 26-ஆம் தேதி கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையுடன், ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் திரும்ப வசூலிக்கவும், தவறும்பட்சத்தில் இழப்பீடு பெற்ற தொகைக்கு உரிய விவசாய நிலத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
அதன்பின் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னிருந்து, வருவாய்த் துறை சார்பில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இழப்பீடு பெற்ற விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையைத் திரும்பக் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 89 விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 
ஆனால், விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையை அரசுக்குச் செலுத்தாததால், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, சம்பந்தப்பட்ட இழப்பீடு பெற்ற விவசாய நிலங்கள் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் ஜப்தி செய்யப்படும் என்று வருவாய்த் துறை மூலமாக விவசாயிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. 
இதனால் மூன்று மாவட்டங்களிலும் இழப்பீடு பெற்ற விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பைச் சேர்ந்த நொய்யல் ஆற்றுப் பாசன சபைத் தலைவர் கே.சி.குழந்தைசாமி கூறுகையில், 'வருவாய்த் துறையினரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளோம். அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.
அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: அதேசமயம், அரசால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விரைவாக வசூலித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என்கிறார் வழக்குத் தொடுத்துள்ள விவசாய சங்கங்களில் ஒன்றான நொய்யல் அடிமடை விவசாயிகள் சங்க நிர்வாகி வி.பி.முத்துசாமி. 
அவர் மேலும் கூறுகையில், 'வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மீண்டும் வசூலித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், பெருமளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. 
தற்போது இந்த இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்த்து 40,000 விவசாயிகள் உள்ளனர். எனவே, பசுமைத் தீர்ப்பாயம், நீதிமன்ற வழக்குகளில் அரசு விரைவாகத் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com