பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் கடையடைப்பு

பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கம்
கடையடைப்பு போராட்டத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட சிவகாசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை.
கடையடைப்பு போராட்டத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட சிவகாசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை.

பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்க வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஜன. 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து முடித்தால்தான் பட்டாசு விற்பனையாளர்களிடம் முன்பணம் பெற்று வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு தயாரிக்க இயலும். எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளும் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிவகாசி வர்த்தக சங்கத்தினர் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. சிவகாசி நகராட்சி தினசரி காய்கறிச்சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் பட்டாசுத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலமும் , ஆர்பாட்டமும் நடைபெற்றது. சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன் தொடங்கிய ஊர்வலம் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை சென்றது. 
இதையடுத்து அங்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் என். மகாலட்சுமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரவைத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய சி.ஐ.டி.யு. துணைத் தலைவர் பத்மநாபன்,சிவகாசி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சமுத்திரபாண்டியன், செயலாளர் ரவிஅருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிவகாசி பேருந்து நிலையம் முன் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜாசொக்கர் (காங்கிரஸ்), முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஏ. ஞானசேகரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சதுரகிரி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சமுத்திரம், ஜீவா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com