பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11 -ஆம் தேதி முதல் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 11,983 பேருந்துகள்
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11 -ஆம் தேதி முதல் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜனவரி 13 -ஆம் தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை, 14 -ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16 -ஆம் தேதி காணும் பொங்கல் ஆகியன கொண்டாடப்படவுள்ளன. இப்பண்டிகை நாள்களையொட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்வதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் , போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
5,158 சிறப்புப் பேருந்துகள்: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு வரும் ஜனவரி 11 (வியாழக்கிழமை), 12, 13 ஆகிய தேதிகளில் மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், 11, 12, 13 ஆகிய தேதிகளில் முறையே 796, 1,980, 2,382 என மொத்தம் 5,158 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 3 தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 6,825 ஆகும். ஆக மொத்தம் பொங்கலையொட்டி 11,983 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னைக்கு திரும்ப...: பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 15, 16, 17 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 3,770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று பிற முக்கிய நகரங்களுக்குச் செல்ல வசதியாக 7,841 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகள் புறப்படும் 4 இடங்கள்: சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்குக் கடற்கரைச் சாலை (இசிஆர்) வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும், சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
வேலூர் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
முன்பதிவு பயணிகள் கவனத்துக்கு: மேற்கண்ட வழித்தடப் பயணத்துக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பேருந்து மையங்களுக்குச் சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கோயம்பேட்டிலிருந்து புறப்படும் பேருந்துகள்: இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு செல்வோர் இப்பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படலாம்.
வழித்தடங்கள் மாற்றம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியாகும் பேருந்துகள், தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். இதன் காரணமாக, முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தாற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும். 
இணைப்பு பேருந்துகள்: அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.
முன்பதிவு கவுன்ட்டர்கள் ஜன.9-இல் திறப்பு: 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் (www.tnstc.in) என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மக்கள் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ள ஏதுவாக , சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-26, தாம்பரம் சானிடோரியத்தில் 2 மற்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒன்று என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் வரும் 9 -ஆம் தேதி திறக்கப்படும்.சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் 044-2479 4709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கார் மற்றும் இதர வாகனங்கள்
ஜனவரி 11 முதல் 13 -ஆம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com