வேலூர் அப்துல்லாபுரம், குப்பம் விஜிலாபுரம் ஆம்பூர் அருகே உருவாகும் இரு விமான நிலையங்கள்

வேலூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகில் தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் இரு விமான நிலையங்கள் அமைய உள்ளன. 
வேலூர் அப்துல்லாபுரம், குப்பம் விஜிலாபுரம் ஆம்பூர் அருகே உருவாகும் இரு விமான நிலையங்கள்

வேலூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகில் தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் இரு விமான நிலையங்கள் அமைய உள்ளன. 
வேலூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அப்துல்லாபுரம் உள்ளது. அப்துல்லாபுரம் விமான நிலையம் ஆம்பூரிலிருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கெனவே விமானிகளின் பயிற்சிக்காக விமான நிலையம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் விமான பயிற்சி நிறுத்தப்பட்டது. 
பயன்பாடில்லாமல் இருந்த அப்துல்லாபுரம் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமான நிலையம் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகும். தோல் மற்றும் காலணி தொழில் சம்பந்தமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆம்பூருக்கு அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். ஆம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்களும் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருகின்றனர். விமான நிலையம் செல்ல வேண்டுமானால் சென்னை அல்லது பெங்களூரு செல்ல வேண்டும். சென்னை மற்றும் பெங்களூருக்கு ரயில், கார், பேருந்து மூலம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் வேலூர் அருகே அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து சிறிய ரக விமானப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
குப்பம் பகுதியில் விமான நிலையம் : ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த சட்டப்பேரவைத் தொகுதியாகும். அதனால் அத்தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது குப்பம் அருகே விஜிலாபுரம் பகுதியில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதன் மூலம் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது. 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இந்த விமான நிலையம் அமைய உள்ளது.
இந்நிலையில், ஆம்பூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள விஜிலாபுரம் பகுதியில் விமான நிலையம் அமைவதால் ஆம்பூர் பகுதி மக்களும், தொழிலதிபர்களும் பயனடைவார்கள். ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குவதால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கூட அங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் குப்பம் தொகுதியில் விஜிலாபுரம், நன்னியாலா, 89 பெத்தூர் ஆகிய ஆந்திர மாநில வன எல்லை வரையில் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்திலிருந்து ஆம்பூருக்கு வரும் தமிழக வன எல்லைப்பகுதி தொடங்கி அச்சம்மா கோயில், சிலாமரத்துபாறை, சுட்டகுண்டா, கோவிந்தன்குண்டு, செட்டேரி, ரால்லகொத்தூர், அத்திமாகுலப்பல்லி, வெங்கடசமுத்திரம் வழியாக ஆம்பூர் வந்துவிடலாம். 
இதில் தமிழக எல்லைப்பகுதியான சுட்டகுண்டா தொடங்கி ஆந்திர எல்லை பகுதியான 89 பெத்தூர் வரையிலான சுமார் 6 கி.மீ. தொலைவு வனப்பகுதி எல்லைக்குள் தமிழக அரசு சாலை அமைக்க வேண்டும். 
சாலை அமைத்தால் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தை விட மிகவும் குறைந்த நேரத்தில் விஜிலாபுரம் விமான நிலையத்திற்கு சென்றுவிடலாம். தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டுமே அவ்வழியாக சென்று வருகின்றன. ஆம்பூர் பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குப்பத்தில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க இந்த வழியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். தமிழக எல்லை பகுதியில் சாலை அமைக்கப்பட்டால் வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு எளிதில் சென்றுவர பயன்படும். 
வேலூர் அப்துல்லாபுரம், விஜிலாபுரம் விமான நிலையங்கள் தொடங்கப்பட்டால் ஆம்பூர் பகுதி தோல் தொழிலதிபர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பெரிதும் பயனடைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com