ஆதி திராவிடர் தொழில் முனைவோரிடம் பொதுத் துறை நிறுவனங்கள் 4 % கொள்முதல் செய்ய நடவடிக்கை

ஆதி திராவிடர், பழங்குடியின தொழில் முனைவோரிடம் இருந்து 4 சதவீதம் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வரின்

ஆதி திராவிடர், பழங்குடியின தொழில் முனைவோரிடம் இருந்து 4 சதவீதம் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் மற்றும் தேசிய சிறு தொழில்கள் கழகம் ஆகியவற்றின் சார்பில், தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மாநில மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் பேசியது:
தொழில் முனைவோர்கள் இடர்பாடுகள் களைந்து, தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கும், தொழில்முனைவோரை ஊக்கவிக்கவும் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் முன்னேற்றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. 
முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக, நீட்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில், அவர்களின் வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு 45 வயதாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகள் பங்கு தொகை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவியும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவீதம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
இதன்படி கடந்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவைச் சேர்ந்த 281 பயனாளிகளுக்கு ரூ.80 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ரூ.19.56 கோடி மானியம் வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து உற்பத்திப் பொருள்களை, மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும். இதில், 4 சதவீதம் கொள்முதல் ஆதிதிராவிடர், பழங்குடியினரிடம் இருந்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
குறு, சிறு,நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ராவ் , தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் தர்மேந்திரபிரதாப், தொழில்துறை முதன்மை செயலர் ராஜேந்திர குமார், குறு சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கூடுதல் தொழில் ஆலோசகர் சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com