காவிரியில் நீரைப் பெற கர்நாடகத்துக்கு அழுத்தம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

காவிரியில் தமிழகத்துக்குள்ள பங்கினைப் பெற நேரடியாகவும் மத்திய அரசின் மூலமாகவும் கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்
காவிரியில் நீரைப் பெற கர்நாடகத்துக்கு அழுத்தம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

காவிரியில் தமிழகத்துக்குள்ள பங்கினைப் பெற நேரடியாகவும் மத்திய அரசின் மூலமாகவும் கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில், திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (திருவையாறு) இந்தப் பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்பினார். காவிரியில் இருந்து சுமார் 10 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்து விட்டால்தான், அது காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு வந்து சேரும். எனவே, இன்னும் ஒருமுறை தண்ணீர் திறந்தால்தான் டெல்டா மாவட்டப் பயிர்களைக் காப்பாற்ற முடியும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:
தமிழக அரசால் ரூ.41.15 கோடிக்கு சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இதுவரை 12.83 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், 19 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டும் மீதமுள்ள 12.64 லட்சம் ஏக்கரில், இதுவரை 12.83 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12.64 லட்சம் ஏக்கரில் இப்போது 4.64 லட்சம் ஏக்கர் அறுவடைக்குத் தயாராக உள்ளது. மீதி 8 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரினை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
மீதமுள்ள 5.85 லட்சம் ஏக்கர் நெற்பயிரினை முழுமையாக அறுவடை செய்ய 26.75 டி.எம்.சி., நீர் தேவையாக உள்ளது. 3 லட்சம் ஏக்கர் பரப்புக்கு ஒருமுறை பாசனமும் 2.85 லட்சம் ஏக்கர் பரப்புக்கு இருமுறை பாசனமும் அவசியமாகிறது.
81 டிஎம்சி நீர் பாக்கி: இப்போது மேட்டூர் அணையில் நீரின் இருப்பு 21.70 டிஎம்சி ஆக உள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டின்படி, கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதுநாள் வரை, 111 டிஎம்சி தண்ணீர்தான் வழங்கியுள்ளது. மீதமுள்ள 81 டிஎம்சி நீர் வரும் மே மாதத்துக்கு முன்பாக வழங்க வேண்டியுள்ளது.
இதற்காக எவ்வளவோ போராடி வருகிறோம். இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், மத்திய அரசின் மூலமாகவும், நேரடியாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலும் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம். இன்னும் நான்கு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசைப் பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com