குட்கா விவகாரத்தில் டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
குட்கா விவகாரத்தில் டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  
திமுக சார்பில், குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டுமென்று நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு சம்பந்தமாக, வருமான வரித்துறையினர் ஒரு அஃபிடவிட்டை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். அது, எங்களுடைய வழக்கறிஞர் வில்சனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மை என்றும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை யாரோ ரோட்டில் போய், வருபவர்கள் சொல்லவில்லை, வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு டிஜிபியாக இருந்த அஷோக்குமாரின் ஒரிஜினல் கோப்புகளையும், அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது எடுத்திருக்கிறார்கள். அவையும் இன்றைக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை இவ்வளவு பகிங்கரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் இப்போது பதவி உயர்வு பெற்று, டிஜிபி பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விலகவில்லை என்றால், முதல்வர் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை, இன்றைய தினம் சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் நாங்கள் எழுப்பினோம். “அது நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் அதுபற்றி பேசக்கூடாது”, என்று சபாநாயகர் சொல்லி, எங்களை பேசவிடாமல் தடுத்துவிட்டார். எனவே, அதனைக் கண்டிக்கின்ற வகையில் திமுகவை சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com