
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
By DIN | Published on : 13th January 2018 10:22 AM | அ+அ அ- |
தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு டப்பிங்கை வெளியிடத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கை வெளியிடத் தடை விதிக்கக் கோரி ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் பிரசாந்தின் தாயார் சாந்தி தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
இதனை எதிர்த்து சாந்தி தியாகராஜன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை (ஜன.10) விசாரணைக்கு வந்தது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கை திரையிடத் தடை இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.