நாட்டின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்வது அவசியம்: விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர்
By DIN | Published on : 13th January 2018 02:05 AM | அ+அ அ- |

நமது நாட்டின் வரலாறு, நன்மதிப்புகளை மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, இந்திய இளைஞர் சங்கத்தின் தலைவரும், துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி தலைமை வகித்தார். இதில், 'சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், இன்றைய இளம் தலைமுறையினரும்' என்ற தலைப்பில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியம் பேசியதாவது:
விவேகானந்தர் போதித்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தேடல், முதியவர்களை மதித்தல் ஆகியவற்றை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்த காரியத்தில் கவனம் குறையாமலும், அதே நேரத்தில் பயம் இல்லாமலும் முயன்றால் அதில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நமது நாட்டின் கலாசாரத்தை வெளி உலகுக்குக் கொண்டு சென்ற விவேகானந்தரை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்கள், இளைஞர்கள் நம் நாட்டின் மீது பற்றுதல் கொள்ளவதுடன், நமது நாட்டின் வரலாற்றையும், நன்மதிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றார் அவர்.
துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் கலாசாரம், வாழ்க்கை நிலை ஆகியவற்றை அறிந்தவர் விவேகானந்தர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அவர் ஆற்றிய உரை இன்றளவும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரையும், அவரது கொள்கைகளையும், கருத்துகளையும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
விழாவில், முன்னாள் டிஜிபியும், எம்எல்ஏவுமான ஆர்.நட்ராஜ், இந்திய இளைஞர் சங்கத்தின் செயலாளர் ஷோபனா ரமேஷ், முன்னாள் துணைத் தலைவர் ஜி.சுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் ஜெயராமன், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.