
பட்டாசு தொழிற்சாலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சிவகாசியில் 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு
By DIN | Published on : 13th January 2018 02:53 PM | அ+அ அ- |

பட்டாசு தொழிற்சாலை பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே தீர்வு காண வலியுறுத்தி சிவகாசியில் 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலையை நம்பித்தான் தொழிலாளர்கள் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். பொதுநல வழக்கு என்று பேரில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் பட்டாசு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பணம் செலுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு வழங்கவில்லை. வழங்காத காரணத்தினால் பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை மத்திய அரசும், தமிழக அரசும் தொழிலாளர்களுடைய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்திவருகிறது. இதனால் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக் குறியாக உள்ளது.
உடனே இந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 21.01.2018 அன்று சிவகாசி நகரம், பாவடி தோப்பு, பத்திரகாளியம்மன் கோவில் அருகில் கழக தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார். இதில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பட்டாசு தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.