எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை ஊதிய உயர்வை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கவும் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.
சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த சட்டமசோதா வெள்ளிக்கிழமை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் அரசு இருக்கும் நிலையில் 100 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தேவையில்லாதது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் 0.13 சதவீத ஊதிய உயர்வுக்குப் போராடி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளான நமக்கு இவ்வளவு ஊதிய உயர்வு தேவையில்லை. எனவே, திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசியது: ஒக்கி புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை. இதை எதிர்க்கிறோம் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம்: எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் 10-ஆவது இடத்தில் உள்ளோம். நம்மைவிட 9 மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டதற்கேற்பதான் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. எல்லாச் சட்டப்பேரவை உறுப்பினர்களுமே பணக்காரர்கள் இல்லை. ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் இன்னும் தொகுப்பு வீட்டில்தான் இருந்தார். அதனால் கஷ்டப்படும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் நிலையை அறிந்துதான் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. திமுகவின் உறுப்பினர்கள் திராவிடமணி, மதிவாணன் போன்றோர் ஊதிய உயர்வுக்காக வெட்டுத் தீர்மானம் அளித்துள்ளனர். இப்போது ஏனோ அரசியல் ஆதாயத்துக்காக திமுக எதிர்க்கிறது.
மு.க.ஸ்டாலின்: அரசியல் ஆதாயம் என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை தீரும் வரை இந்த ஊதிய உயர்வு வேண்டாம் என்று திமுகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டு பேரவைத் தலைவரிடம் கொடுக்க ஏற்கெனவே தயார் நிலையில்தான் உள்ளோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இதுதான் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு நிகழ்வுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைவரும் அறிந்ததுதான். எல்லோரும் வசதியானவர்கள் இல்லை. அதையெல்லாம் புரிந்துதான் மனசாட்சியின்படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னையையும் இதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
மு.க.ஸ்டாலின்: திமுகவின் கொள்கை லட்சியத்தின் அடிப்படையில்தான் பேசுகிறேன். நிதி நெருக்கடியில் உள்ளதாக அரசே தெரிவித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை தீராத வரை இந்த ஊதிய உயர்வை ஏற்கமாட்டோம்.
ஓ.பன்னீர்செல்வம்: 2006-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஊதிய உயர்வு வேண்டாம் என்றனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு அந்த நிதி வேண்டாம் என்றால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குக் கொடுங்கள் என்றார். இப்போது திமுக உறுப்பினர்களுக்கும் அதையே வேண்டுகோளாக வைக்கிறேன்.
மு.க.ஸ்டாலின்: இந்த அரிய கருத்தை நானும் ஏற்கிறேன். போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை தீரும் வரை திமுக சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வை முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தரத் தயாராக இருக்கிறோம் என்றார்.
மேலும் மு.க.ஸ்டாலின் கூறியது: 
2010-இல் திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை, அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் ஊதிய உயர்வு தேவையில்லை என்று ஜெயலலிதா ரத்து செய்ததாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com