குட்கா விவகாரம்: சசிகலா அறையில் ரகசியக் கடிதம்

போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் குட்கா விவகாரம் தொடர்பாக ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்

போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் குட்கா விவகாரம் தொடர்பாக ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் குட்கா ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய கலால் துறை, தமிழகத்துக்கு தில்லியிலிருந்து சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுகிறது. ஹவாலா முறையில் இதற்கான பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுவரை ரூ.55 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரரான வருமானவரித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2016-இல் செங்குன்றத்தில் உள்ள மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் பங்குதாரர்களாக உள்ள குட்கா குடோனில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது குட்கா விற்பனைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் குறித்த ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் குட்கா ஊழலில் தொடர்புடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு ரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2016 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது மாதவராவ் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், கடந்த 2017 நவம்பர் மாதம் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித்துறை சோதனையிடப்பட்டது. அப்போது குட்கா ஊழல் குறித்து அப்போதைய காவல்துறை டிஜிபி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதை ஹெச்.எம். என மாதவராவ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டு வைத்துள்ளார். மேலும் குட்கா சோதனை தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முறையிட்டார். அப்போது, இந்த வழக்கை வரும் ஜன.17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com