சொந்த ஊருக்குச் செல்ல சென்னையில் ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சனிக்கிழமை குவிந்தனர்.
பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல சனிக்கிழமை மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.
பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல சனிக்கிழமை மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சனிக்கிழமை குவிந்தனர்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை 2,382 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 4,657 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இதேபோன்று சென்னை சென்ட்ரல், எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. சனிக்கிழமை மட்டும் அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டனர்.
சனிக்கிழமை காலை முதலே 5 இடங்களில் உள்ள தாற்காலிக பேருந்து மையங்களை நோக்கி சென்னை மாநகரப் பேருந்துகளில் குடும்பத்துடன் திரளானோர் புறப்பட்டுச் சென்றனர். அத்துடன் கார்களில் பலர் சென்னையில் இருந்து புறப்பட்டனர். இதனால் மாலை 3 மணிக்குப் பிறகு அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக் கழக அலுவலர்கள், சென்னை மாநகரக் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட ஆங்காங்கே வாக்கி-டாக்கி மூலம் தொடர்பு கொண்டு போக்குவரத்து நெரிசலை சீர்செய்ததோடு, தேவைக்கேற்ப பேருந்துகள் வந்து செல்ல உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதனால் கோயம்பேடு, அண்ணாநகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் சானடோரியம், சின்னமலை (சைதாப்பேட்டை) ஆகிய 5 இடங்களுக்கு மக்கள் கூட்டம் வர வர, தேவைக்கு ஏற்ப வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க மக்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் படிகளில் அமர்ந்தபடியே பயணம் செய்தனர். கடைசி நேரத்தில் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக கோயம்பேடு உள்பட 5 இடங்களில் இருந்து கடந்த 3 நாள்களாக சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
வடமாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சனிக்கிழமை அதிக அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதற்காக 2,382 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 4,657 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில், கோயம்பேடு - 3,418, பூந்தமல்லி - 560, தாம்பரம் சானடோரியம் - 240, சின்னமலை (சைதாப்பேட்டை) - 199, அண்ணாநகர் - 240 என பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. ஏற்கெனவே ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்த 27,750 பயணிகளும், சிறப்பு முன்பதிவுக் கவுண்டர்களில் சனிக்கிழமை மாலை 5 மணி வரை 18,958 பேர் முன்பதிவு செய்தும் பயணம் செய்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்யாமல் வந்ததால் கூட்டத்துக்கு ஏற்ப உடனுக்குடன் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல சனிக்கிழமை மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள். (வலது) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com