தமிழக அரசை விமர்சிக்க புதுவை ஆளுநருக்குத் தகுதி இல்லை: அதிமுக பேரவைக் குழுத் தலைவர் கண்டனம்

புதுவையில் அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்துவரும் ஆளுநர் கிரண் பேடிக்கு, மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழக அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று புதுவை சட்டப்பேரவை

புதுவையில் அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்துவரும் ஆளுநர் கிரண் பேடிக்கு, மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழக அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 
தமிழக அரசை புதுவை ஆளுநர் கிரண் பேடி தேவையின்றி விமர்சனம் செய்துள்ளார். அந்த மாநில அரசு செயல்படுத்தி வரும் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பத்திலுள்ள அத்தனை பெண்களுக்கும் தங்கம் வழங்கப்படுகிறது. 
இதனை ஆளுநர் கிரண் பேடி, ஒரே பெண் 3 தாலி கட்டுவாரா எனக் கேட்டு விமர்சனம் செய்துள்ளார். ஆளுநரின் இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிப்பதாக உள்ளது. இதை புதுச்சேரி அ.தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச திட்டங்களை குறைகூறும் கிரண் பேடி, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது குறித்து பேசுவாரா? தமிழக அரசின் மீதான ஆளுநரின் விமர்சனம் தொடர்ந்தால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும். 
புதுச்சேரி அரசு பொங்கல் துணிக்குப் பதில் பணம் வழங்கி வருகிறது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.750-ஐ ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ, மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ என எந்த அடிப்படையில் இலவச அரிசி வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ஏனென்றால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் பெற வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ஆனால், புதுவையில் ரூ.72 ஆயிரத்தை வருமான உச்சவரம்பாகக் கொண்டு இலவச அரிசி 10 கிலோ, 20 கிலோ என வகைப்படுத்தி கொடுக்கப்படுகிறது. 
இதன் மீதான ஆளுநரின் தடைக்கு அமைச்சர்கள் கேள்வி கேட்கவில்லை. 
இதனால் மஞ்சள் குடும்ப அட்டை வைத்துள்ள அப்பாவி ஏழைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் ஆ.அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com