தமிழகத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் நிதிநிலைமை சீராக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் நிதிநிலைமை சீராக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
மாநில அரசின் நிதி நிலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.ஒரு மாநிலத்தின் சிறந்த நிதி மேலாண்மைக்கு அளவுகோல் நிதிப் பற்றாக்குறையும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவும் தான். அதைச் சீராகவும், சிறப்பாகவும் இந்த அரசு பராமரித்து வருகிறது. வருவாய்ப் பற்றாக்குறை உள்ள நிலையைத்தான் நிதி நெருக்கடி எனக் குறிப்பிட்டு, அந்த நிலையையும் சமாளித்து ஊதிய உயர்வு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
எனவே, நிதி மேலாண்மை என்பது கடினமான நிதி நிலைச் சூழலில் எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பதை பொருத்துத்தான். எனினும், திட்டங்களுக்கு உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும், அது குறைக்கப்படவில்லை என்றும் ஆளுநர் உரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உதய் திட்டக் கடன்: அரசின் நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும். 2016-17 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 2.96 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டு, பின்னர் திருத்த மதிப்பீட்டில் 4.58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 
2016-17ஆம் ஆண்டில், 3 சதவீத வரையறையைக் கடப்பதற்கு முக்கியக் காரணம், உதய் திட்டத்தின் கீழ் ரூ.22. 815 ஆயிரம் கோடி மின்சார வாரியத்தின் கடனை மாநில அரசே ஏற்றுக் கொண்டதுதான். இதற்கென மத்திய அரசு நிதிப் பற்றாக்குறை வரம்புக்கு, 2016-17-ஆம் ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. 
உதய் திட்டம் நீங்கலாக, நிதிப் பற்றாக்குறை கணித்தால், அது திருத்த மதிப்பீட்டின்படி 2.88 சதவிகிதமாக இருந்தது. 
2016-17ஆம் ஆண்டின் முதல் நிலைக் கணக்குகளின்படி நிதிப் பற்றாக்குறை ரூ.56 ஆயிரத்து 171 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறைக்கான விகிதம் 4.19 சதவிகிதமாகவும், உதய் திட்டத்தின் கீழ் ஏற்கப்பட்டுள்ள கடன் நீங்கலாக நிதிப் பற்றாக்குறை ரூ.33,356 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறைக்கான விகிதம் 2.49 சதவிகதமாகவும் இருந்தது. 
நிதிப் பற்றாக்குறை 3 சதவீத வரையறையைக் கடக்கும் என்பதை அறிந்து, தமிழ்நாடு நிதி மேலாண்மை மற்றும் பொறுப்புடைமைச் சட்டத்துக்கு, 2016-17ஆம் ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
2017-18ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், நிதிப் பற்றாக்குறை 2.79 சதவீதமாக, 3 சதவீதம் என்ற வரையறைக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதர மாநிலங்களின் விவரம்: மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடுகையில், 2017-18 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தியில், மத்திய பிரதேசத்தில் 3.49 சதவீதமாகவும், தெலங்கானாவில் 3.49 சதவீதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 2.97 சதவீதமாகவும், கேரளத்தில் 3.44 சதவீதமாகவும் உள்ளன. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2017-18 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, 3.20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தின் நிதி நிலை மத்திய அரசைக் காட்டிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கட்டுக்குள் நிர்வகிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. 
மேலும், நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படியும், நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின்படியும், நிதி பற்றாக்குறை 2016-17 ஆம் ஆண்டைத் தவிர்த்து, வரையறுக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் நிதி நிர்வாகம் சீராகவே நிர்வகிக்கப்படுகிறது என்றார்.
கோப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை
ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் பேசும்போது கூறியது:
கடந்த 10 மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து 903 கோப்புகள் எனது பரிசீலனைக்குப் பிறகு, அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com