திமுக ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டமியற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டமியற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டமியற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டமியற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆதனூரில் நேற்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், 
சமத்துவ பொங்கல் விழாவில் மிகுந்த ஆர்வத்தோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் திரண்டிருக்கும் கழக நிர்வாகிகளே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு என்னை அழைப்பவர்களை விட, பங்கேற்கும் எனக்கு இந்த விழாவில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே, ஒவ்வோராண்டும் தமிழர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை நானும், எனது துணைவியார் அவர்களும் தொடர்ந்து பெற்று வருகிறோம். குறிப்பாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து நடத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் எங்களை உற்சாகமாக வரவேற்பது, பலவித கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, அந்த விழாவில் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவிக்கும் வாய்ப்பினை ஒவ்வொரு ஆண்டும் நான் பெற்று வருகிறேன்.

இந்த ஆதனூர் பகுதி எந்தளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். காரணம், திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் இந்த ஆதனூர் கிராமத்துக்கு எத்தனையோ பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆதனூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இரு நியாயவிலைக் கடைகள் கழக ஆட்சிக்காலத்தில் தான் தொடங்கப்பட்டது. அதேபோல, ஊரபாக்கம் உயர்மட்டப் பாலம், கூடுவாஞ்சேரி உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில் தான். இப்பகுதிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டது, சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது, பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது என இப்பகுதியில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எத்தனையோ பணிகளை என்னால் பட்டியிட்டுச் சொல்ல முடியும்.

நமது அன்பரசு குறிப்பிட்டது போல, 1990 ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆதனூரில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக, 39 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளுவர் நகரை உருவாக்கி, 412 வீடுகளை திறந்து வைக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.59,000 கடனுதவியுடன் இந்த வீடுகள் கட்டித்தரப்பட்டன. இதற்காக தொழிலாளர்களின் ஊதியத்தில் மாதாமாதம் ரூ.502 ரூபாய் வீதம் 10 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டு, இப்போது அந்த வீடுகள் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகியுள்ளன. தற்போது ஒரு வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்றைக்கு நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் சோர்ந்துபோய் மூலையில் முடங்கி நாம் உட்கார்ந்தது கிடையாது. காரணம், ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களைப் பற்றி கவலைப்படும் மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். விரைவில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புவதை விட, கழக முன்னோடிகள், நிர்வாகிகள், செயல் வீரர்கள் எல்லாம் விரும்புவதை விட, ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

காரணம், இன்றைக்கு தமிழ்நாட்டின் நிலை மிகுந்த மோசமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினார்கள். தொழிலாளர்களின் வைப்புத்தொகையை, நியாயமான ஓய்வூதியத்தை, முறையான ஊதிய உயர்வு ஆகியவற்றை பல ஆண்டுகளாக இந்த அரசு அவர்களுக்கு வழங்க மறுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க நிர்வாகிகளை எல்லாம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து ஒரு நாடகத்தை நடத்தி, இன்றைக்கு நீதிமன்றம் வரை அந்தப் பிரச்னை சென்றிருக்கிறது. விரைவில் நீதிமன்றத்தின் மூலமாக ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அல்ல, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து ஒருமுறையாவது பேசினாரா என்றால் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் பலமுறை அறிக்கைகள் வாயிலாக, வேண்டுகோளாக, ஏன் அவரோடு நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, சட்டமன்ற கூட்டத் தொடரிலும் நேரமில்லா நேரத்தில் சுட்டிக்காட்டினேன். நேற்றைய தினம் கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசியபோதும் குறிப்பிட்டேன்.

ஆனால், இன்றைக்கும் ஒரு பிரச்னை கிளம்பியது. அது என்னவென்றால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் நியாயமான முறையில் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் என தலைவர் கருணாநிதி உயர்த்தி இருக்கிறார். ஆனால், 100 சதவீதம் வரை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை இன்றைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அப்படி உயர்த்தியதையும் கூட நான் தவறென வாதிடவில்லை. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த, ஓய்வூதியத்தை வழங்க, வைப்பு நிதியை வழங்க நிதியில்லை, கடன்சுமையில் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்களான எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தக்கூடாது, அது எங்களுக்குத் தேவையில்லை, முதலில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீருங்கள், அதன் பிறகு எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை என்று நான் சட்ட முன்வடிவை நிறைவேற்றும் போது நான் குறிப்பிட்டேன்.

ஆனால், அதுபற்றியெல்லாம் இந்த ஆட்சி கவலைப்படவில்லை. எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, போராட வேண்டிய, சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டிய, தட்டிக்கேட்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களின் கவலையெல்லாம் ஆட்சியில் எப்படி தொடர்வது என்ற ஒன்றுதான். எனவே, விரைவில் தேர்தல் வர வேண்டும் என்று தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். மிக விரைவில் தேர்தல் வரப்போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நியாயமாக இந்த ஆட்சியாளர்கள் சட்டப்பேரவையில் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். அதனால் தான் திட்டமிட்டு அவர்களுடைய கட்சியை சேர்ந்த 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்கினார்கள். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னையும் சேர்த்து 21 பேரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். எனவே, புத்திசாலித் தனமாக நாம் நீதிமன்றத்துக்கு சென்று தடையுத்தரவு பெற்றிருக்கிறோம். இந்த மாதம் இறுதிக்குள் அந்த வழக்குகளின் விசாரணை முடிந்து, இந்த ஆட்சியை அகற்றும் வகையில் நிச்சயமாக தீர்ப்பு வெளியாகும்.

நான் எங்கு சென்றாலும் மக்கள் ஏக்கத்தோடு, எதிர்பார்ப்போடு, பெருமூச்சோடு இதையே கேட்கிறார்கள். விமானத்தில் சென்றாலும், ரயிலில் பயணம் செய்தாலும், டீக்கடையில் டீ குடித்தாலும், ஓட்டலுக்கு சென்றாலும், நடைப்பயிற்சி செய்யும்போதும், எங்கு சென்றாலும் நம்மை சந்திக்கும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி, “இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள்?”, என்பதுதான். இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், “ஏன் இன்னும் விட்டு வைத்து இருக்கிறீர்கள்?”, என்று கோபத்துடன் கேட்கும் நிலை உள்ளது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்வார்கள், எனவே விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் என்று அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென்று தலைவர் கருணாநிதி சட்டமாக்கினார்.

அதனை இன்றைய ஆட்சியாளர்கள் ரத்து செய்து விட்டார்கள். விரைவில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் நேரத்தில், தலைவர் கருணாநிதி கொண்டு வந்தபடி, தை முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டமாக உருவாக்கும் நிலை வரும் என்பதையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இங்கு திரண்டுள்ள உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதனூரில் இன்றைய தினம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சி என்னுடைய உள்ளத்தில் என்றைக்கும் பதிந்திருக்கும் நிகழ்ச்சியாக, வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. காரணம், இதை நான் ஒரு கட்சி நிகழ்ச்சியாக பார்க்கவில்லை, நம்முடைய குடும்ப நிகழ்ச்சியாக கருதுகிறேன். தமிழர்கள் எல்லாம் ஒன்றுகூடி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சியாக இதை நான் காண்கிறேன். இந்த விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com