நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்கள் சேவகன்தான்: மு.க. ஸ்டாலின் 

நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்
நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்கள் சேவகன்தான்: மு.க. ஸ்டாலின் 


சென்னை: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது.

கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை. காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார். நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன். 

இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறத். அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது.

எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com