பொங்கல் பண்டிகை: ராமதாஸ், சு. திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
பொங்கல் பண்டிகை: ராமதாஸ், சு. திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள  தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களுக்கு ஆயிரம் திருவிழாக்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மைத் திருநாள் தைப் பொங்கல் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்தும்  இனிப்பை  பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களாகும். ஆனால், உண்மையில் தமிழருக்கும், இந்தத் திருவிழாவின் கதாநாயகர்களான உழவர்களுக்கும் இத்திருநாள் இனிப்பானதாக அமையவில்லை. ஒருபுறம் உழவர்கள் விளைவித்து வழங்கிய கரும்புக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் விலை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை. மற்றொரு பக்கம் ஓராண்டுக்கு முன் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்  பெருமக்களுக்கு இன்று வரை பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மக்களும், உழவர்களும் இவ்வாறு திண்டாடிக் கொண்டிருக்க தமிழகத்தின் நீரோ மன்னர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலை மாறி அனைத்துத் தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு தமிழக  மக்களுக்கு  அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும். அதற்காக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
பொங்கல் திருநாள் மகிழ்ச்சிப் பொங்கலாக அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

இன்று நமது இளைஞர்களோடு சேர்ந்து நமது மோடி அரசு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டோடு பொங்கல் நடைபெறுவதே நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். 

கரும்புக்கட்டோடு கொண்டாடும் இந்த விழாவிற்கு காரணமான விவசாயிகளின் பயிரும் காப்பாற்றப்பட வேண்டும், உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நதிகள் இணைத்து நாடு முழுவதும் செழிக்க இந்த பொங்கல் வழிவகை செய்யட்டும்.

கடலில் வீணாகும் கோதாவரி நீரை காவிரிக்கு கொண்டுவந்து இணைத்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை காக்க திட்டம் தீட்டி உள்ள எங்கள் காவிய தலைவர் மோடி அவர்களுக்கு நன்றி.

கோடனக்கோடி விவசாயிகளுக்கு மண்வள பரிசோதனை அட்டை வழங்கி பூச்சி தாக்காத வேம்பு பூசிய விதைகளை வழங்கி பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் திட்டம் வழங்கி விவசாயிகளின் உயிர் காத்த மோடி அரசுக்கு இந்நன்னாளில் நன்றி கூறி வரவிருக்கும் பட்ஜெட்டில் விவசாயமே முன்னுரிமை பெரும் என்ற நமது பிரதமரின் இனிப்பான செய்தியே பொங்கலுக்கு பாஜக அரசின் வாழ்த்தாகும்.

நாடு முழுவதும் செழிக்க தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர் திருநாளில் செழித்தோங்க வேண்டும்.

லஞ்சம் ஒழிந்து, வறுமை ஒழிந்து வாழ்க்கை செழிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். 

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர்
‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முதுமொழி, தை மாத துவக்க நாளினை அறுவடைத் திருநாளாகவும், பொங்கல் தினமாகவும், தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளாகவும் இப்படி பல விதங்களில் தமிழக மக்களால் உவகையோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்களாலும், தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களாலும், சாதி, மதம், மொழி வேறுபாடின்றி உள்ளப் பூரிப்புடன் உவகையோடு கொண்டாடப்படும் விழா பொங்கல் விழாவாகும். பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுவர் முதல் நாள் போகி என்றும், மறு நாள் வீட்டுப் பொங்கல் திருநாளாகவும் அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு பல காலமாய் தமிழர் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com