முழுமையாக சீரடைந்தது அரசுப் பேருந்துகளின் இயக்கம்: மீண்டும் முன்பதிவு தொடக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பேருந்துகள்
போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதை அடுத்து, பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரிசைக்கட்டி நிற்கும் பேருந்துகள்.
போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதை அடுத்து, பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரிசைக்கட்டி நிற்கும் பேருந்துகள்.

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின. 
சென்னையில் இருந்து அதிகாலை முதலே வெளியூர்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள், மாநகரில் இயங்கும் சென்னை மாநகரப் பேருந்து அனைத்தும் இயங்கின.
தமிழகத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சுமார் 23 ஆயிரம் பேருந்துகளில் 20 ஆயிரம் பேருந்துகள் அந்தந்த மாவட்டங்களில் இயங்கின. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 1,980 சிறப்புப் பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 3,150 பேருந்துகள் என அனைத்துப் பேருந்துகளும் அனைத்து வழித் தடங்களுக்கும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
சென்னையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்பட அனைத்து பேருந்து நிலையங்களும் கடந்த ஒருவாரமாக வெறிச்சோடி காணப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியதை அடுத்து பேருந்து நிறுத்தங்கள், நிலையங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக மாறின. சென்னையில் வெள்ளிக்கிழமை மாநகர பேருந்துகள் முழுமையாக ஓடின. காலை முதலே பேருந்துகளில் வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் காணப்பட்டனர்.
ஒரு வார கால வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து மீண்டும் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு பணி நேரம் குறித்த தகவல்கள் முறையாக அறிவிக்கப்படாததால் அவர்கள் தடுமாறினர். காலையில் பணிக்கு வர வேண்டியவர்கள் மாலையிலும், மாலையில் பணிக்கு வரவேண்டியவர்கள் காலையிலும் வந்ததால் பணி ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டது. 
வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அரசுப் பேருந்துகளில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: ஜன.12-ஆம் தேதி மட்டும் 1,980 சிறப்புப் பேருந்துகள் உள்பட 4,657 பேருந்துகள் சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கத் திட்டமிட்டு மாலை 5 மணி வரை சுமார் 1,700 பேருந்துகள் இயக்கப்பட்டன.
சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள்: கோயம்பேட்டில் 26, தாம்பரம் 2, பூந்தமல்லி 1 என 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. அதில் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 5,000 பேர் முன்பதிவு செய்தனர். அதேபோல் ஏற்கெனவே ஆன்-லைனில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 26 ஆயிரத்து 200 பேர் வெளியூர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கோயம்பேடு மலர் அங்காடி, கோயம்பேடு பேருந்து வளைவு, பேருந்து வளாகத்தில் பேருந்துகள் வந்து நிற்பதற்கான மேடைகள் என 25 இடங்களை மையமாக வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் மாநகரக் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அலுவலர்கள் வாக்கி டாக்கி உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்புக் கவுண்டர் அருகே ஒரு சிறப்புக் கண்காணிப்பு மையம் காவல்துறையால் அமைக்கப்பட்டு பிற இடங்களில் இயக்கப்படும் தாற்காலிக பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப பேருந்து சேவையை வழங்கி வருகின்றனர். இதனால், முன்பதிவு செய்யாத பயணிகளின் வருகைக்கேற்ப பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கா வண்ணம் அவ்வப்போது பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com