சேலம், கோவை, மதுரையில் அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் அமைக்க மத்திய அரசு அனுமதி

சேலம், கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் (பஸ் போர்ட்) அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் இரும்பாலை சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல்லை நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம் இரும்பாலை சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல்லை நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம், கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் (பஸ் போர்ட்) அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இரும்பாலை சந்திப்புப் பகுதியில் ரூ. 21.97 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அடிக்கல் நாட்டி முதல்வர் பேசியது:
ஐந்து சாலை, குரங்குச்சாவடி, திருவாக்கவுண்டனூர், செவ்வாய்ப்பேட்டை, முள்ளுவாடிகேட், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்களைக் கட்ட தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அனுமதி அளித்தார். வேறு எந்த ஆட்சியிலும் சேலம் மாவட்டத்துக்கு இந்த அளவில் திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை.
அந்தவகையில், சேலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் ரூ.320 கோடியில் ஐந்து சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மல்லூரில் இருந்து அரபிக் கல்லூரி வரை 21 கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலை அமைக்க மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும்.
சேலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பேருந்து முனையம் அமைக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட மக்களின் அனைத்து பிரச்னைகளும் படிப்படியாக தீர்க்கப்படும் என்றார்.
பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம், கோவை, மதுரையில் பிரமாண்டமான பேருந்து முனையம் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்காக மூன்று இடங்களை தேர்வு செய்து, மத்தியக் குழுவிடம் தெரிவிக்கப்படும். மத்தியக் குழு ஆய்வுக்குப் பிறகு பேருந்து முனையம் (பஸ் போர்ட்) அமைக்கும் பணிகள் தொடங்கும்.
சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவை தொடங்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
குட்கா விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க கூடாது. விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் வெளியாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com