புதுவையில் விவசாயக் கடன் ரூ.19.42 கோடி தள்ளுபடி

புதுவை மாநிலத்தில் 4,094 விவசாயிகள் பெற்ற வேளாண் கடன் ரூ.19.42 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சனிக்கிழமை பேட்டியளித்த  சமூகநலம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மு.கந்தசாமி. உடன்  சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து.
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சனிக்கிழமை பேட்டியளித்த  சமூகநலம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மு.கந்தசாமி. உடன்  சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து.

புதுவை மாநிலத்தில் 4,094 விவசாயிகள் பெற்ற வேளாண் கடன் ரூ.19.42 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி கூறினார். மேலும், இதுதொடர்பான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் அமைச்சர் மு.கந்தசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
புதுவை மாநிலத்தில், வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இது நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அண்மையில் ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, கடன் தள்ளுபடிக்கான அரசாணையை புதுவை அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
கடன்களிலிருந்து விவசாயிகளை விடுவிக்கவும், அவர்கள் புதிய கடன்களைப் பெற்று வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளவும் வேளாண் கூட்டுறவுக் கடன் நிறுவனங்களிலிருந்து வேளாண் மற்றும் வேளாண் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக கடந்த 31.03.2016 வரை விவசாயிகளால் பெறப்பட்ட கடன், அதற்கான வட்டி, அபராத வட்டி, பிற கட்டணங்கள் சேர்ந்து ரூ.19.42 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம், 4,094 விவசாயிகள் பயன்பெறுவர்.
அதாவது, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கிராம கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்கள், விவசாய சேவை கூட்டுறவு சங்கங்கள் ஆகியற்றில் 3,238 விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.12.87 கோடி, அதற்கான வட்டி ரூ.2.42 கோடி என மொத்தம் ரூ.15.29 கோடி தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், புதுச்சேரி மாநில கூட்டுறவு நிலவள வங்கியில் 6 விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.10 லட்சம், அதற்கான வட்டி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சமும் தள்ளுபடி செய்யப்படும்.
காரைக்கால் பிராந்தியத்தில் கிராம கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்களில் கடன் பெற்ற 850 விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.3.53 கோடி, அதற்கான வட்டி ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.3.93 கோடியும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அரசு அறிவித்துள்ள இந்தக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அந்தந்த விவசாய கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், புதுச்சேரி மத்திய கூட்டுறவு நிலவள வங்கி மற்றும் அதன் கிளைகளில் பார்வைக்கு ஒட்டப்படும்.
பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றாலோ அல்லது வழங்கப்பட உள்ள தள்ளுபடி சரியாக கணக்கிடப்படவில்லை எனக் கருதினாலோ இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் கடன் பெற்ற சங்கத்திலோ, வங்கி கிளையிலோ நேரடியாக முறையீடு செய்யலாம்.
குறுகிய காலக்கடன், மத்திய காலக்கடன் சம்பந்தமான முறையீடுகளுக்கு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநரையும், நீண்டகாலக் கடன் சம்பந்தமான முறையீடுகளுக்கு புதுச்சேரி மத்திய கூட்டுறவு நிலவள வங்கியின் மேலாண் இயக்குநரையும் அணுக வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com