தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ரஜினிகாந்த்துடன் பாஜக கூட்டணி சேர வேண்டும்

தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க ரஜினிகாந்த்துடன் பாஜக கூட்டணி சேர வேண்டும் என 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ரஜினிகாந்த்துடன் பாஜக கூட்டணி சேர வேண்டும்

தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க ரஜினிகாந்த்துடன் பாஜக கூட்டணி சேர வேண்டும் என 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி வலியுறுத்தினார்.
'துக்ளக்' இதழின் 4-ஆவது ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் குருமூர்த்தி பேசியது: தமிழகத்தில் திமுகவை எதிர்க்கக் கூடிய சக்தி பெற்ற ஒரே கட்சியாக இருப்பது அதிமுகதான். ஆனால், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக, இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும் அந்தக் கட்சியால் வலுப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எப்படியாவது இந்த அரசை வீழ்த்திவிட்டு, தேர்தல் வந்தால் நாம் வென்றுவிடுவோம் என்ற கனவில் கடந்த 6 மாதங்களாக மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு, இது குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. இப்போது, தேவை என்றால் இந்த அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்கிறார். 
ஏனெனில், இந்த அரசாங்கம் வீழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால், நாம் வெற்றி பெறுவோமா என்ற மிகப் பெரிய கேள்விக்குறி திமுகவுக்கு எழுந்துள்ளது. எதிர்ப்பே இல்லாத நிலை உருவாகியிருப்பதால், அதிமுக அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்கப் போகிறது. இதை வீழ்த்துவதற்கு திமுக தயாராக இல்லை. எனவே, அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தினகரனை இணைக்க நினைத்தால் எதிர்ப்போம்: அதிமுக பலவீனமடைந்து வருவதைத் தடுக்க, கட்சியில் தினகரனைக் கொண்டுவர முயற்சித்தால், அதை எதிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் 'துக்ளக்' எடுக்கும். அது மட்டுமின்றி, அவ்வாறு தினகரனை இணைத்துக் கொள்வது அந்தக் கட்சிக்கும் நல்லதல்ல. அவரை இணைப்பதால், அதிமுக மேலும் உடையுமே தவிர, ஒருமித்த அதிமுக உருவாகாது. இதை அதிமுகவினர் உணரவேண்டும்.
பணம் கொடுத்ததை தினகரன் மறுக்க முடியாது: தினகரனின் வெற்றியைப் பொருத்தவரை, அவர் தேர்தலையே விலை கொடுத்து வாங்கிவிட்டார். முந்தைய இடைத் தேர்தலின்போது கொடுத்த பணத்துக்கு, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நன்றியோடு தினகரனை ஜெயிக்க வைத்திருக்கின்றனர். பணம் கொடுத்துத்தான் ஓட்டு வாங்கினேன் என்பதை தினகரனே மறுக்க முடியாது.
உளுத்துப் போன திராவிட அரசியல்: இன்றைய சூழலில் தமிழகத்தில் திராவிட அரசியல் உளுத்துப் போய்விட்டது என்பதுதான் உண்மை. இரு கட்சிகளும் தமிழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்துப் போயுள்ளது. அமைச்சர்கள் அனைவரும் வசூலில் மட்டுமே குறியாக உள்ளனர். இதனால், தொழில் நிறுவனங்கள் திட்டங்களுக்காக அரசு அதிகாரிகளிடம் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். இது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இருந்தபோதும், தமிழகத்தில் இன்றைக்கு மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக் கூடியச் சூழல் உருவாகியுள்ளது.
60 லட்சம் புதிய வாக்காளர்கள்: கருணாநிதி போன்ற தலைமை இல்லாத திமுக, ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாத அதிமுக, 2021-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 18 வயதைப் பூர்த்தி செய்கின்ற 60 லட்சம் புதிய வாக்காளர்கள் வர இருக்கின்றனர். 
அவர்களை ஈர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் இரு திராவிடக் கட்சிகளும் எடுக்கவில்லை. அதற்குரிய திறன் அவர்களிடம் இல்லை. தமிழகத்தின் அரசியல் திசையையே மாற்றக்கூடிய சக்தி இந்த 60 லட்சம் வாக்காளர்களிடம் உள்ளது. 
இந்தச் சூழலில்தான், அரசியலுக்கு இளைஞர்கள் வருவதில்லை என ஸ்டாலின் கூறினார். 
அதாவது திமுகவுக்கு இளைஞர்கள் வருவதில்லை என்பதுதான் அதற்கு அர்த்தம். தமிழக இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்கு திட்டமோ கொள்கையோ அவர்களிடம் இல்லை. 
அரசியல் மாற்றம் ஏற்படும்: திராவிட அரசியல் உளுத்துப் போய்விட்டது என்பதுதான் உண்மை. இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனியும் திராவிட அரசியலை நடத்தி தமிழகத்தில் அதிகாரத்துக்கு வருவது என்பது கடினம்.
இதுபோன்ற காரணங்களால், மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக் கூடிய சூழல் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த் புத்திசாலி: இந்தச் சூழலில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் ஆன்மிக அரசியல் என்று அறிவித்தது, கழகங்களின் அரசியல் போல் இருக்காது என்பதற்காகத்தான். 
தமிழகத்தில் இளைஞர்கள் இன்றைக்கு ஈர்க்கப்படுவதே ஆன்மிகத்தால்தான். அரசியலால் அல்ல. 
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் புத்திசாலி. அதனால்தான், அவர் ஆன்மிக அரசியலை அறிவித்திருக்கிறார்.
ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் கூற வேண்டும் என்கின்றனர். 
அந்த அளவுக்கு திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிகத்தை மறக்கடிக்கச் செய்துள்ளனர். 
எனவே, ஆன்மிக அரசியல் என ரஜினிகாந்த் அறிவித்திருப்பது தமிழகத்துக்கு எல்லா விதத்திலும் நல்லது. 
அதற்கு 'துக்ளக்' உறுதுணையாக இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு, அவரை சரியான பாதையில் பயணிக்கச் செய்யும் பணியை 'துக்ளக்' தொடர்ந்து செய்யும்.
பாஜகவும் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏதாவது ஒரு கழகத்துடன் பாஜக இணைகிறது என்றால், அது சதி செய்கிறது என்றுதான் அர்த்தம். எனவே, தமிழகத்தில் ரஜினிகாந்த்துடன் பாஜக கூட்டணி வைத்தால், தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் குருமூர்த்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com