எதிர் வரும் தேர்தல்களில் வெற்றிபெற சூளுரைப்போம்: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் கடிதம்

எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற எம்ஜிஆர் பிறந்த நாளில் அதிமுகவினர் சூளுரைப்போம் என்று முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி
எதிர் வரும் தேர்தல்களில் வெற்றிபெற சூளுரைப்போம்: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் கடிதம்

எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற எம்ஜிஆர் பிறந்த நாளில் அதிமுகவினர் சூளுரைப்போம் என்று முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு இருவரும் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: எம்ஜிஆரின் அரும் பணிகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை அளித்து வருகிறோம். ஜெயலலிதா தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் 2016 சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது உழைத்ததால் தொடர்ந்து இரண்டாம் முறையாக அதிமுகவின் ஆட்சி அமைந்தது.
கவிழ்க்க முயற்சி: இந்த நல்லாட்சியை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்துவிட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, அதிமுக ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம். தனக்குப் பின்னும் பல ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும் என்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா சூளுரைத்தார். 
இதற்கு, அதிமுகவை ஒற்றுமை உணர்வோடு கட்டிக் காத்து, வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வது தான், ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். எம்ஜிஆரின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு, தற்போதைய அரசும் செயல்படுகிறது. 
தமிழ்ப் பணி: தமிழ் மொழிக்கென தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி ரூ. 2 ஆயிரமாக வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். திருக்குறளை சீனம், கொரியா மற்றும் அரபு மொழியிலும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களை சீனம் மற்றும் அரபு மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிடச் செய்து, தமிழ் மொழியின் புகழை ஜெயலலிதா பரப்பினார். 
அவர்களின் வழியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து தமிழ் மொழி குறித்த ஆய்வை பலரும் மேற்கொள்ள ஏதுவாக ரூ.10 கோடியை தமிழக அரசின் சார்பில் வழங்கி உள்ளோம். 
அரசு பாடுபடும்: அதிமுக தமிழக மக்களுக்கு தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதிமொழியை இந்த நேரத்தில் எடுத்துக் கொள்வோம். வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் இல்லாத பெருமையாக 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்த இயக்கம், ஜெயலலிதாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி மக்கள், தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி தொடர்ந்து நடைபோடும்.
வெற்றிபெற சூளுரை: எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் வகையில் அனைவரும் பணியாற்ற எம்ஜிஆர் பிறந்த நாளில் சூளுரைப்போம் என்று அவர் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com