ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு பிடி வீரர், காளைக்கு கார் பரிசு: முதல்வர், துணை முதல்வர் சார்பில் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரர் மற்றும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்பட்ட காளையின் உரிமையாளருக்கு
ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு பிடி வீரர், காளைக்கு கார் பரிசு: முதல்வர், துணை முதல்வர் சார்பில் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரர் மற்றும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்பட்ட காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடு பிடி வீரருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சார்பிலும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் சார்பிலும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பரிசாக வழங்கப்படும் இரண்டு கார்களும் வாடிவாசல் அருகே மேடையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மேலூர் மாவட்டம் தெற்குத்தெருவைச் சேர்ந்த சரத்குமார் காலையில் இருந்து சிறப்பாக செயல்பட்டு 6 காளைகளை அடக்கிய நிலையில் இறுதிச்சுற்றில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டார். 
இந்நிலையில் மாலை 4 மணிக்கு இறுதிச்சுற்றில் களம் இறக்கப்பட்ட குழுவில் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அஜய்(22) ஒரு மணி நேரத்தில் 8 காளைகளை பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதையடுத்து சிறந்த மாடு பிடி வீரராக அஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போல களத்தில் சிறப்பாக விளையாடிய 9 காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் மதுரை மாவட்டம் மிளகரணையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை களத்தில் நின்று விளையாடியதால் முதலிடத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டு முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாடு பிடி வீரர் அஜய், காளையின் உரிமையாளர் சந்தோஷ் ஆகியோருக்கும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த படி இரண்டு கார்களையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆகியோர் வழங்கினர். ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக மாடு பிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு கார்கள் பரிசாக வழங்கப்படுவது இதுவே முதல்முறை. 
இதுதவிர மாடு பிடி வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி பொருள்கள், பீரோ, மெத்தை, பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் பாராட்டு
பரிசளிப்பு விழா முடிவில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறும்போது, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 638 காளைகள் பங்கேற்றன. மருத்துவப் பரிசோதனையில் 35 காளைகள் நிராகரிக்கப்பட்டு 603 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மாலை 5 மணி வரை 571 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 890 வீரர்கள் பரிசோதிக்கப்பட்டு 193 பேர் நிராகரிக்கப்பட்டு 697 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 10 மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நடமாடும் மருத்துவ வாகனங்கள் 4-ம் நிறுத்தப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டை பார்வையிட்ட தேசிய விலங்குகள் நலவாரிய குழுவினர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததாகவும், ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்தியதாகவும் பாராட்டு தெரிவித்தனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com