ஹஜ் மானியம் ரத்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை கண்டிப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹஜ் மானியம் ரத்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை கண்டிப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்கான மான்யங்கள் பலவற்றை ஏதேனுமொரு சாக்குபோக்கு சொல்லி, சிறிது சிறிதாக ரத்து செய்துவரும் மத்திய பாஜக அரசு, தற்போது ஹஜ் பயணிகளுக்கான பயண மான்யத்தையும் ரத்து செய்துள்ள பிற்போக்கு நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த திரு. அப்தாப் அலாம் மற்றும் திரு. ரஞ்சன பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டத்தின்படி ஹஜ் மான்யம் சட்டபூர்வமானது”, என்று கூறியிருந்ததை மத்திய பா.ஜ.க. அரசு, வசதியாக மறந்து விட்டதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த காவேரி மேலாண்மை வாரியம், நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஆதார் உள்ளிட்ட வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அமல்படுத்துவதில் முரண்பாடு கொண்டு, அமைதி காக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, ஹஜ் மான்யத்தை ரத்து செய்வதில் மட்டும் இத்தனை தீவிரமாக, விரைந்து நடவடிக்கைகள் எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்தது மட்டுமல்ல, ‘மான்யம் அரசியல் சட்டபூர்வமானது’ என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை மீறிய செயல் என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

“வளர்ச்சி, கூட்டுறவு கூட்டாட்சி, ஊழல் ஒழிப்பு”, என்று மக்களிடம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்றைக்கு ஹஜ் பயணத்திற்கான மான்யம் ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்து, நாட்டை “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பாதையிலிருந்து பின்னடைவை உண்டாக்கும் வேறு திசையில் அழைத்துச் செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, ஹஜ் பயணிகளுக்கு மான்யம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com