பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை: தில்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! 

பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை; வரப்போவதும் இல்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை: தில்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! 

புதுதில்லி: பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை; வரப்போவதும் இல்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வியாழனன்று  தில்லி சென்றிருந்தார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில்  அளித்த அவரது பேட்டியில் இருந்து:

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்.  தில்லியில் மர்ம மரணம் அடைந்த மாணவர் சரத் பிரபு விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தெளிவான விபரம் கிடைக்கும்.

மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றான்று விழா தொடர்பான கல்வெட்டு உடைக்கப்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இம்முறை தில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு கிடையாது. அவரைச் சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை.  அதனால் பிரதமர் மோடியுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; இனி வரப்போவதும் இல்லை.

ரஜினிகாந்த் , கமல்ஹாசன் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியினைத் தொடனலாம். ஆனால் அவர்கள் இருவரும் இறுதியில் மக்களைச் சந்திக்க வேண்டும், ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். 

ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பாக திவாகரனின் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் எதுவும் கூற இயலாது.

மத்திய பட்ஜெட்டில் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணையாறு நதிகள் இணைப்பு தொடர்பாக திட்டம் வகுத்து நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது   

ஆண்டாள் -  வைரமுத்து சர்ச்சை விவகாரத்தில் தேவை இல்லாமல் தொடர்ந்து பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது.   

காவிரியில் இருந்து நீர் திறக்கும் விவகாரத்தில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடி பெற்ற தீர்ப்பின் படி, அதனை மதித்து கர்நாடக மாநில அரசும், மத்திய அரசும் செயல்பட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com