20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகக் கூறியது ஏன்? தொட்டியம் ராஜசேகர் விளக்கம்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கூறி 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகக் கூறியது ஏன் என்று தொட்டியம் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகக் கூறியது ஏன்? தொட்டியம் ராஜசேகர் விளக்கம்


முசிறி: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கூறி 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகக் கூறியது ஏன் என்று தொட்டியம் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசுகையில், ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான். தினகரன் வெற்றி பெற முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த திட்டத்தை வகுத்தோம். அந்த திட்டம் நன்றாகவே பலனளித்துவிட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், டிடிவி தினகரனை வெற்றி பெறச் செய்யத்தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் விடியோவை வெளியிடுமாறு வெற்றிவேலிடம் சொன்னதே தினகரன்தான் என்றும் ராஜசேகர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ராஜசேகர் பேசியிருப்பது தவறான தகவல் என டிடிவி தினகரன் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தனது பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ராஜசேகர், தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறினேன். இது செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சு. பொதுக் கூட்டத்தில் பேசியது அல்ல. ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாகக் கூறியது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே. அதிமுகவினர் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கும் போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்த நமக்கா ஓட்டு போடுவார்கள் என்று சொன்னேன். நான் கூறியது தவறாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுவிட்டது என்று கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர்களை உற்சாகப்படுத்த இதுபோல பேசுவார்கள். எல்லா கட்சிகளிலுமே இது நடக்கும். ஆனால் நான் பேசியது ஊடகங்களில் இப்படி வெளியாகியிருப்பது மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com