காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு: ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு: ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தாய்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் வீரமரணம் அடைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சுரேஷின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் மிக முக்கியமான பணியில் சுரேஷ் காட்டியுள்ள வீரத்திற்கும், தியாகத்திற்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டம் பண்டாரச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பிரெட்டிப்பட்டித் தொகுதிக்குட்பட்ட பண்டாரச்செட்டிப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்குகளில் பா.ம.க.வினர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

இந்திய இராணுவம், துணை இராணுவப்படையில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து தேசத்தை காக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னணியில் இருப்பது தமிழர்கள் என்ற வகையில்  நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதேநேரத்தில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த நமது படைவீரர்களின் குடும்பத்தினரைப் பேணிக் காப்பதில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த சுரேஷின் குடும்பத்திற்கு அவரது ஊதியம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது. அவர் வீரச்சாவடைந்து விட்ட நிலையில் அவரது மனைவிக்கு  அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com