தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்

தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்

தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரிவிதிப்புக் குழுவின் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வீட்டுத்தேவைக்காக கட்டாயத்தின் பேரில் வாங்கப்படும் தங்கம் மற்றும் நகைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க மத்திய அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை கைவினைப் பொருட்களுக்கு 15 மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 8 மாநிலங்களில் மட்டுமே அதிகபட்சமாக 5% வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், பொருட்கள் மற்றும் சேவை வரி  முறையில்  கைவினைப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படுவதால் அதை நீக்க வேண்டும்  என்று கடந்த அக்டோபர் மாதம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை பா.ம.க. இளைஞரணித் தலைவரும் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது பெரும்பாலான கைவினைப் பொருட்கள் உட்பட 29 பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜி.எஸ்டி வரி விதிப்பால் கைவினைப் பொருட்களின் விலைகள் 30% வரை உயர்ந்திருந்தன. இதனால் அவற்றின் விற்பனை கடுமையாக  வீழ்ச்சியடைந்திருந்தது. வரும் 25-ஆம் தேதி முதல் பெரும்பாலான கைவினைப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு கிடைக்கும் என்பதால் அவற்றின் விலைகள் குறைந்து விற்பனை தீவிரமடையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இது கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். அதேநேரத்தில் இந்த 29 பொருட்கள் தவிர மீதமுள்ள கைவினைப் பொருட்களின் மீதான பொருட்கள் மற்றும் சேவை வரியையும் 5 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாகக் கொண்டு வருவதன் மூலம் தான் கைவினைப் பொருட்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுத்து வளர்ச்சியை ஏற்படுத்த  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்த 10 நாட்களில் நடைபெறவுள்ள பொருட்கள் மற்றும் சேவை வரிவிதிப்புக் குழுவின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் சமையல் எரிவாயு, பழைய மகிழுந்துகள், சொட்டுநீர்ப் பாசனத்திற்கான கருவிகள், 20 லிட்டர் குடிநீர் கேன்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதும், வெண்சுருட்டு புகை வடிப்பான் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டிருப்பதும் கூட அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டிய சாதகமான மாற்றம் தான்.

அதேநேரத்தில் தங்கம் மீதான பொருட்கள் மற்றும் சேவை வரியை ரத்து செய்வதில் மட்டும் மக்களின்  எதிர்பார்ப்புகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது. வைரம் மற்றும் அதைப்போன்ற விலை உயர்ந்த நவரத்தின கற்களுக்கான வரியை 3 விழுக்காட்டிலிருந்து 0.25% என்ற அளவுக்கு குறைத்துள்ள மத்திய அரசு அதே சலுகையை தங்கத்திற்கு நீட்டிக்க மறுத்திருக்கிறது. பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்புக்கு முன்பாக தங்கத்திற்கு ஒரே ஒரு விழுக்காடு மதிப்புக்கூட்டு வரி தான் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் இது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. தங்கம் மீதான வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புக் கூட்டு சேவைக் கட்டணம் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கத்தின் மீது 15.67% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிகளில் 90% கடந்த 6 ஆண்டுகளில் விதிக்கப்பட்டவை.

2012-13 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்தபோது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார்.  நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தவுடன் அந்த வரி நீக்கப்படும் என்று சிதம்பரம் அளித்த வாக்குறுதி காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இன்று வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒரு பவுன் தங்கத்திற்கு வரியாக மட்டும் ரூ.2985 வசூலிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதற்கு இணையான தொகை சேதாரம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் வரியும், சேதாரமும் இவ்வளவு வசூலிக்கப்படுவதில்லை.

தங்கத்தை ஆடம்பரமான பொருள் என்று கூறி கூடுதல் வரியை நியாயப்படுத்த முடியாது. இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது திருமணத்தில் கட்டாயமான ஒன்றாகிவிட்டது. ஏழைக் குடும்ப திருமணமாக இருந்தாலும் கூட, குறைந்தது 10 முதல் 15 பவுன் வரதட்சனையாக வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும், இந்திய மக்கள் தொகையில் 5%க்கும் குறைவானவர்களால் பயன்படுத்தப் படும் வைரம் உள்ளிட்ட கற்களின் மீதான வரியைக் குறைத்துள்ள மத்திய அரசு 95 விழுக்காட்டினரால் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க அரசு மறுப்பதை நியாயப்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டப் பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.912 உயர்ந்துள்ளது. வரி, சேதாரம், விலை உயர்வு என்ற பெயரில் ஒரு பவுன் தங்கத்திற்கு ரூ.7000 வரை பறிக்கப்படுவது தான் தங்கத்தை ஏழைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையை மாற்ற தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, பொருட்கள் மற்றும் சேவை வரி ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்வதுடன், சேதாரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com