தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


தருமபுரி: காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி- சாலம்மாள் தம்பதியரின் மகன் சுரேஷ் (42). 

இவர் 20 ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வந்தார். உயிரிழந்த வீரர் சுரேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வாகனத்தில் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஜன.19) அதிகாலை அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி ஜானகி, (30), மகள் புன்னகை (13), மகன் ஆதர்ஷ் (7) ஆகியோர் உள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் சுரேஷ் என்பவர் பலியானார். அதேபோன்று அப்பகுதியில் வசித்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்பு எழக்கூடும் எனத் தெரிகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பும் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காவலர் ஒருவரின் உயிரை பாகிஸ்தான் படையினர் பறித்தனர். தற்போது மீண்டும் அத்தகைய நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையானது சுமார் 3,323 கிலோ மீட்டருக்கு நீண்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் அந்த எல்லைப் பகுதி 961 கிலோ மீட்டர் பரப்புக்கு உள்ளது. பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்யும் பொருட்டு, நமது ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியத் தரப்பில் அவ்வப்போது பதிலடி தரப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் காஷ்மீரின் சம்பா பகுதிக்குட்பட்ட கிராமங்கள் மீதும், அங்கு அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறிய ரக குண்டுகளை அவர்கள் வீசினர்.

அதைத் தொடர்ந்து இந்தியத் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிது நேரம் நீடித்த இந்தச் சண்டை ஒரு கட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இதில், பிஎஸ்எஃப் படையின் 78-ஆவது பிரிவு வீரர் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வீரமரணமடைந்த சுரேஷ், தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்தவர்.

அதேபோன்று சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் என்ற 17 வயது இளம்பெண்ணும் பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பலியானார். இந்தச் சம்பவத்தில் பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

காஷ்மீர் எல்லையான ரஜெளரியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததும், அதற்கு பதில் நடவடிக்கையாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து அந்நாட்டு வீரர்கள் மூவரை இந்திய ராணுவம் கொன்றதும் நினைவுகூரத்தக்கது.

குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: தமிழக அரசு
எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஜம்மு-காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், எதிரிகளின் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com