பொங்கல் பண்டிகை: கடந்த ஆண்டைக் காட்டிலும் 454 சாலை விபத்துகள் குறைவு

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக காவல்துறையின் தீவிர நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 454 குறைந்துள்ளன

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக காவல்துறையின் தீவிர நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 454 குறைந்துள்ளன என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, சாலை விபத்துக்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 
கடந்த 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 4 நாள்கள் வாகனங்களில் அதிவேகமாக சென்றதாக 8,077 வழக்குகளும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றதாக 6,475 வழக்குகளும், செல்லிடப்பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டியதாக 7,090 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றதாக 6,254 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 23,151 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 18,230 வழக்குகளும் பதியப்பட்டன.
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த பண்டிகை நாள்களில் பதியப்பட்ட வழக்குகளைக் காட்டிலும், இவ்வாண்டு பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். குறிப்பாக ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் கடந்தாண்டை விட இவ்வாண்டு 83 சதவீத்தில் இருந்து 265 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக 108 சாலை விபத்து சேவை இலவச தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தன.மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டை விட, இவ்வாண்டு மாநிலம் முழுவதும் 454 சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன.
சென்னையில் 37, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53, திருவண்ணாமலை மாவட்டத்தில் 42, திருநெல்வேலி மாவட்டத்தில் 42, மதுரை மாவட்டத்தில் 40, விழுப்புரம் மாவட்டத்தில் 33, திண்டுக்கல் மாவட்டத்தில் 32, புதுக்கோட்டை மாவட்டத்தில் 31,விருதுநகர் மாவட்டத்தில் 29, தூத்துக்குடி மாவட்டத்தில் 27, சிவகங்கை மாவட்டத்தில் 23, சேலம் மாவட்டத்தில் 20, ராமநாதபுரம் மாவட்டத்தில் 18, பெரம்பலூர் மாவட்டத்தில் 14, தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 என மொத்தம் 454 சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன எனச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com