ஆயிரம் ரூபாய் கொடுத்து பேருந்து பாஸ் எடுத்தவர்களின் நிலை என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களும் இன்று அதிகாலை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆயிரம் ரூபாய் கொடுத்து பேருந்து பாஸ் எடுத்தவர்களின் நிலை என்ன?


சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களும் இன்று அதிகாலை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

சென்னை நகரில் தொடங்கி அனைத்து ஊர்களிலும் இயக்கப்படும் பேருந்துகளில் புதிதாக விதிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதனால், இன்று காலை முதலே தமிழக அரசு அறிவித்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க 1000 ரூபாய் கொடுத்து பேருந்து பாஸ் வாங்கியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அளித்திருக்கும் விளக்கத்தில், சென்னை மாநகர பேருந்துகளில் 1000 கொடுத்து பஸ் பாஸ் வாங்கியவர்கள் பிப்ரவரி 15ம் தேதி வரை அதாவது வழக்கம் போல பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஒரு நாளில் எத்தனை பேருந்துகளில் வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் வழங்கப்படும் 50 ரூபாய் டிக்கெட் மட்டும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர்களில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்போது ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணத்தின்படி, இனி ரூ.6 வசூலிக்கப்படும்.

விரைவுப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரையில் இப்போது ரூ.17 என்ற அளவில் வசூலிக்கப்படும் கட்டணம் இனி ரூ.24 ஆக உயர்த்தப்படும். இடைநில்லாப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.18 கட்டணம் இனி ரூ.27-ஆக வசூலிக்கப்படும்.

அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.33 ஆகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் ரூ.27-லிருந்து ரூ.42 ஆகவும், வால்வோ பேருந்துகளில் ரூ.33-லிருந்து ரூ.51 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நகரப் பேருந்துகள்: சென்னை, கோவை உள்பட பல்வேறு மாநகரப் பேருந்துகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இப்போது குறைந்தபட்ச கட்டணமாக உள்ள ரூ.3 இனி ரூ.5 ஆக உயர்த்தப்படும்.

அதிகபட்சமாக இப்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ.12 கட்டணமானது ரூ.19 ஆக உயர்த்தப்படும். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.14-லிருந்து ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகள்: சென்னை போன்ற நகரங்களில் இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்துகளில் இப்போது வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 -ஆக அதிகரிக்கப்படும். ரூ.100 என்ற அளவில் உள்ள அதிகபட்சக் கட்டணமானது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தனியாருக்கும் பொருந்தும்: சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளிலும் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com