ஆர்.கே.நகர் தேர்தல்: எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன்

தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றார் டி.டி.வி. தினகரன்அணியின் வடக்கு மாவட்டச் செயலரும், தொட்டியம் தொகுதி

தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றார் டி.டி.வி. தினகரன்அணியின் வடக்கு மாவட்டச் செயலரும், தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மா.ராஜசேகரன்.
திருச்சி மாவட்டம், முசிறியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியபோது, ' சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரூ,.20 டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம்' என ராஜசேகரன் பேசியதாகக் கூறி, தொலைக்காட்சிகளில் வெள்ளிக்கிழமை செய்தி ஒளிபரப்பானது. 
இதைத்தொடர்ந்து திருச்சி பிரஸ் கிளப்பில் ராஜசேகரன் செய்தியாளரிடம் கூறியது:
முசிறியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து எம்.ஜி.ஆர். பிறந்த நாள் குறித்து ஆலோசித்தோம். மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தோம். தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசப்பட்ட பேச்சுதான் அது.
'ரூ.6,000 கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கவில்லை; 20 ரூபாய் டோக்கன் கொடுத்த எங்களுக்கா வாக்களித்திருப்பார்கள்' என்று பேசினேன். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், கட்சிக்கு உறுப்பினர்களை அதிகம் சேர்க்கும் விதத்திலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பேசினேன். இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. ஆனால், எனது பேச்சு ஊடகங்களில் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
ஏனைய அரசியல் கட்சிகள் நாங்கள் காசு கொடுத்துதான் ஜெயித்தோம் என்று ஏளனம் பேசுகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை மீறி மக்கள் தினகரனுக்கு ஓட்டு போட்டது பணத்துக்காக அல்ல. தினகரன் மீது மக்கள் கொண்ட நல்ல அபிப்ராயத்தால்தான்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பணத்துக்காக நடைபெற்ற தேர்தல் அல்ல.தன்னுடைய வாக்குகளில் 60 சதவிகிதத்தை ஆளுங்கட்சி இழந்திருக்கிறது. எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்திருக்கிறது என்பதையும் உணர வேண்டும் என்றார் ராஜசேகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com