கவிஞர் வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் கவிஞர் வைரமுத்து மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு
கவிஞர் வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் கவிஞர் வைரமுத்து மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.
வழக்குப்பதிவு: 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 8- ஆம் தேதி தினமணி நாளிதழில் கவிஞர் வைரமுத்துவின் கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றிருந்த கருத்துகள் இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் வைரமுத்து மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கவிஞர் வைரமுத்து மனு: இதனையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ''கட்டுரையில் கடவுள் ஆண்டாள் குறித்து தான் எந்தத் தவறான கருத்தையும் குறிப்பிடவில்லை. ஓர் ஆய்வாளரின் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியிருந்தேன். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, கலாசாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தும் நோக்கிலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது கருத்தை முழுமையாக அறியாமல் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நீதிபதி கேள்வி: இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரர் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி, 'சில குறிப்புகளைச் சுட்டிக்காட்டி, செய்தித்தாளில் வெளியான கருத்து எப்படி மனுதாரரின் கருத்து என எடுத்துக்கொள்ள முடியும் , இதற்காக எப்படி மனுதாரர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய முடியும்' என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து, காவல் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com