தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாளை தவறாகச் சொல்வேனா? வைரமுத்து விளக்கம்

என் மனம் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. எப்போதுமே என் நெஞ்சுக்குள் கூவிக் கொண்டிருக்கும் ஒரு குயில் கடந்த 10 நாட்களாக மூர்ச்சையற்றுக் கிடக்கிறது.
தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாளை தவறாகச் சொல்வேனா? வைரமுத்து விளக்கம்

சர்ச்சைக்குள்ளான ஆண்டாள் கட்டுரை குறித்து கவிஞர் வைரமுத்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விடியோவில், என் மனம் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. எப்போதுமே என் நெஞ்சுக்குள் கூவிக் கொண்டிருக்கும் ஒரு குயில் கடந்த 10 நாட்களாக மூர்ச்சையற்றுக் கிடக்கிறது.

ஏன் என்ன காரணம் யார் செய்த பிழை?

ஆண்டாள் புகழ் பாட நான் ஆசைப்பட்டது தவறா?

3 மாதங்கள் ஆண்டாள் குறித்து நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளை திரட்டியது பிழையா?

ராஜபாளையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பிறந்த மண்ணில் நான் ஆசை ஆசையாக ஓசையோடு அரங்கேற்றியது தவறா?

நான் அண்டாளைப் பற்றி மட்டும் ஏன் கட்டுரை எழுதுகிறேன் என்று கேட்கலாம்? இது ஆண்டாளைப் பற்றி  மட்டுமல்ல.. 3000 ஆண்டு நீண்டு பரந்து இருக்கும் தமிழ் வெளியில் தமிழுக்கு தடம் சமைத்தவர்களை, இந்த புதிய தலைமுறைக்கு, இளைய தலைமுறைக்கு ஆற்றுப்படுத்த ஆசைப்பட்டேன்.

தொல்காப்பியர் முதல் நிகழ்கால படைப்பாளன் வரை ஒரு பருந்துப் பார்வையில் ஆராய்ச்சிப் பார்வையில் எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், திருமூலர், அப்பர், வள்ளலார், உ.வே. சுவாமிநாத அய்யர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் என விரிந்து பரந்து உள்ளது.

நாயன்மார்களில் அப்பரை தேர்ந்தெடுத்த நான் ஆழ்வார்களில் ஆண்டாளை தேடி எடுத்து எழுதினேன். ஆண்டாளின் பாசுரங்களைப் பாடப் பாட பக்தியில்லாத எனக்கு சக்தி பிறக்கிறது. தமிழ் பிறக்கிறது. ஆண்டாளை கொண்டாடி கொண்டாடி குதூகலித்தேன். 

ஆண்டாளின் பெருமையெல்லாம் அங்கு உவந்து சொன்னேன். தமிழ் வெளியில் முதலில் கேட்ட பெண் விடுதலைக் குரல் ஆண்டாளின் குரல் என்று நான் அங்கு பதிவு செய்தேன். என் மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் உரிமை எனக்குத்தான் என்று கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாள் குரல் என்று சொன்னேன்.

8ம் நூற்றாண்டின் மையம் என்று அவளது காலத்தைக் கணித்துக் கொண்ட பிறகு, அது ஆணாதிக்க சமூகம், சமய சமூகம்,  நிலவுடைமை சமூகம், இந்த சமூகத்தில் ஆண்டாள் மட்டும் ஒரு தனிக்குரலாக,  நான் தனி மனுஷி இந்த மானிடருக்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்று கேட்ட அந்த குரலுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து ஆராய்ந்து எழுதினேன். எத்தனையோ மேற்கோள்களைக் காட்டினேன்.

கடைசியில் ஒரே ஒரு மேற்கோளைக் காட்டினேன். சமூகவியல் பார்வையில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை அது. அந்த கட்டுரையை எழுதிய 86 வயது இந்தியப் பேராசிரியர் இன்னும் இருக்கிறார். அவர் சொன்னதை ஏன் பதிவு செய்தேன் என்றால், தேவதாசி என்பது உயர்ந்த  குலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை அது. நான் மனிதனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் கடவுளைத்தான் திருமணம் செய்து கொள்வேன். நான் கடவுளுக்கு அருகில் சென்று விட்டேன். எந்த மனிதனுக்கும் கட்டுப்பட்டு வாழேன் என்ற உயர்ந்த குரல் அது.  அந்த உயர்ந்த குரல் எப்படி வந்தது என்றால், மனிதக் கூட்டத்தில் இருந்த விடுபட்டு கடவுளைச் சென்றடைந்த ஒருத்தியின் குரலாக இருக்க முடியுமோ என்ற ஆதாரத்தைக் காட்டுவதற்காக அந்த வரிகளை மேற்கோள் இட்டேன்.

ஒருவேளை அந்த வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற அச்சத்தில் தான் பக்தர்கள் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற அச்சத்தோடு பேசுகிறேன், பேராசிரியர் நாராயணன், கேசவன் என்ற இருவரின் கருத்து அது.

மூலத்தை  எழுதியவர்களே குற்றமற்றவர்கள், தீங்கற்ற பார்வை பார்த்தவர்கள், ஆண்டாளை உயர்த்தி சொன்னவர்கள் என்றால், மேற்கோள் காட்டிய நான் இழிந்த பார்வை பார்த்தவர் ஆவேனா, மூலமே உயர்த்திப் பேசுகிறதே, மேற்கோள் காட்டிய நான் ஆண்டாளை சிறுமைப்படுத்திவிட்டேனா? 

ஆண்டாள் எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய். கற்ற தாய். எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாளை தவறாகச் சொல்வேனா? என்னை தமிழ்ச் சமூகம் சந்தேகப்படலாமா? நான் இழிவு செய்வேனா? அப்படி குற்றம் செய்வதாக இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் போய் அதனை செய்வேனா? 

யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்துக்காகவோ திரித்துப் பரப்பிவிட்டார்கள். தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையை கத்தரித்துவிட்டார்கள்.  வைரமுத்து ஆண்டாளை தாசி என்று கூறிவிட்டதாக முதல் செய்தி பரவுகிறது. அதை மேலும் பரப்பியவர்கள், தாசி என்பதை திரித்து வேசி என்று பரப்புகிறார்கள்.

நான் உயர்வாக சொன்னதை தாழ்வாக சொன்னதாக திரித்துக் காட்டுவது எந்த வகையில் நியாயம்? இதனால் எனக்கு நேர்ந்த இழிவுகள் அதிகம். சொல்லால், செயலால், எழுத்தால், ஊடகங்களால், எத்தனையோ இழிவுகளை நான் தாங்கிக் கொண்டேன். எல்லா விஷத்தையும் நான் குடித்துக் கொள்கிறேன். என்னை ஆதரித்த தமிழ் சமூகம் அமிர்தத்தை மட்டுமே அருந்தட்டும். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டால் ஆண்டாளையும் புரிந்து கொள்வீர்கள், இந்த வைரமுத்துவையும் புரிந்து கொள்வீர்கள்.
 

ஒரு வேளை யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கேட்டது எனது மனிதாபிமானம். என் தமிழால் யாரும் புண்பட்டு விடக் கூடாது என்று வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

வருத்தம் தெரிவித்த பிறகும், நாங்கள் விடைகொண்ட பிறகும், இந்த சமூகத்தை வணங்கிய பிறகும் இவர்கள் மேலும் திரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், இனக் கலவரத்தை மதக் கலவரத்தை பரப்பப் பார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமூகமே நீ ஞானச் சமூகம்.. புரிந்து கொள்வாய் நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com