பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பேருந்து கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

பேருந்து கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: வரலாறு காணாத வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தவிர்க்கவே முடியாத காரணங்களால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்றால் அதிகபட்சம் 10 சதவீதம் உயர்த்தியிருக்கலாம். ஆனால், 66 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,509 பேருந்துகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியற்றவை. பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தராத அரசு, பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. எனவே, தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இரா.முத்தரசன்: பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை ஏற்க முடியாது. கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.
தொல்.திருமாவளவன்: பேருந்து கட்டணங்கள் ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள்தான் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே விஷமாக ஏறும் விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறுகின்றனர். தற்போது அவர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல கட்டண உயர்வு அமைந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது. உடனடியாக, கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும்.
சண்முகம் (தொமுச பேரவை): பேருந்து கட்டண உயர்வு மக்கள் மீது மேலும் சுமையை அதிகரிக்கும். இந்த உயர்வால் போக்குவரத்துக் கழக பிரச்னை தீர்ந்துவிடும் என்பது ஏற்புடையது இல்லை. கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com