போட்டித் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.,) நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய
போட்டித் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.,) நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 
கடித விவரம்: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை நடத்துவதில் உள்ள பாரபட்சமான நடைமுறையால், வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 
பாரபட்சமான முடிவு: நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் பி, குரூப் சி, குரூப் டி பணியிடங்களுக்கான போட்டித் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாரபட்சமான அணுகுமுறை, தேர்வு எழுதும் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் பாதிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
வடமாநிலப் போட்டியாளர்கள் இத்தேர்வுகளை அவர்களுடைய தாய்மொழியான ஹிந்தியில் எழுதும் உரிமையுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் தாய்மொழியான தமிழில் தேர்வு எழுதும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற, அநியாயமான கட்டுப்பாடுகளைத் திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் பணியில் சேருவது நியாயமற்ற முறையில் தடுக்கப்பட்டுள்ளது. 
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவும், வட மாநிலப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தவர் அதிகம்:2016-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு முடிவுகளை பார்த்தால், தங்களது தாய்மொழியான ஹிந்தியில் தேர்வு எழுதியவர்கள் தில்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கிலும், தங்களது தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத தென்மாநில போட்டியாளர்கள் சிலநூறு பேர் என்ற அளவிலும் மத்திய அரசு அலுவலகப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
ஒப்பீட்டின்படி பார்த்தால், தமிழகத்தில் இருந்து வெறும் 111 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால் தில்லியிலிருந்தோ 3 ஆயிரத்து 922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதோடு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து பணியில் அமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலான பணியாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களும் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவதால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து விட்டது. 
காலிப்பணியிடங்கள்: இந்தப் பாகுபாடுகள் நிறைந்த தேர்வுமுறையினால், ஒருபக்கம் மத்திய அரசு அலுவலகங்களில், தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதோடு, மறுபக்கம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உருவாகிறது. எனவே, போட்டித் தேர்வுகளை பிராந்திய அளவிலான தேர்வுகளாக ஏற்கனவே இருந்தது போல் நடத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com