மணல் குவாரி: தடை நீடிக்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அரசின் மேல்முறையீட்டு மனுவை
மணல் குவாரி: தடை நீடிக்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
6 மாதத்துக்குள் மூட உத்தரவு: புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமையா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரங்க.மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 29 -ஆம் தேதி உத்தரவிட்டார்.
மேல்முறையீடு: தனிநீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தின்படி உரிய அனுமதி பெறாமல் மணலை சேமித்து வைப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும். இதனை மீறுபவர்கள் மீது கனிமவள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இறக்குமதி மணல் தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கோரிக்கை விடுக்காத நிலையிலேயே அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாத காலத்துக்குள் மூடவும், புதிதாக மணல் குவாரிகளை திறக்கத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார். எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
ஆன்லைன் மூலம் விற்பனை: இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், 'தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தற்போது மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும், அவை மாநில விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்' என்றார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
தள்ளுபடி: நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, நீதிமன்றம் வரையறை செய்த காலத்துக்குள் மணல் குவாரிகளை மூடவும் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com