வீர மரணமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் உடல் அடக்கம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஏ.சுரேஷின் உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அவரது சொந்த
ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷின் உடலுக்கு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தும் ராணுவத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷின் உடலுக்கு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தும் ராணுவத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஏ.சுரேஷின் உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி-சாலம்மாள் தம்பதியரின் மகன் ஏ.சுரேஷ் (42).
இவர், ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் வீர மரணமடைந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த வீரர் சுரேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து எல்லைப் பாதுகாப்பு படை வாகனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், அவரது சொந்த ஊரான பண்டாரசெட்டிப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டது.
அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், காவல் துறை கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், வருவாய் கோட்டாட்சியர் ரா.கவிதா, டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன், மாவட்ட அரசு வழக்குரைஞர் ஆர்.ஆர்.பசுபதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள், உறவினர்கள் வீரர் சுரேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை கமாண்டோ (டி.சி) கமலேஷ்குமார் தலைமையில், 12 வீரர்கள் அடங்கிய குழுவினரின் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வீரர் சுரேஷின் உடல், பண்டாரசெட்டிப்பட்டி சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் நிதி அளிப்பு: உயிரிழந்த வீரர் சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வீரர் சுரேஷின் மனைவி ஜானகி,மகள் புன்னகை, மகன் ஆதர்ஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் நிதியை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
மு.க.ஸ்டாலின், அன்புமணி இரங்கல்
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பலியான சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுரேஷ் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சுரேஷின் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் மிக முக்கியமான பணியில் சுரேஷ் காட்டியுள்ள வீரத்துக்கும், தியாகத்துக்கும் வீர வணக்கம்.
அன்புமணி: பாதுகாப்புப் படை வீரர் சுரேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து தேசத்தை காக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னணியில் இருப்பது நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
அதே நேரத்தில் தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த நமது வீரர்களின் குடும்பத்தினரைப் பேணிக் காப்பதில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். வீர மரணமடைந்த சுரேஷின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com